சென்னை: தமிழ் திரையுலகில் தற்போது வெற்றிகரமான இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ’டிராகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது இத்திரைப்படம்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து நடித்து வரும் படங்களின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறை வட்டாரத்திலும் ஏற்படத் துவங்கியுள்ளது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த இரண்டு படங்களும் இதே ஆண்டில் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகவுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வந்த ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany) திரைப்படம் செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது. காதல் மற்றும் அறிவியல் புனைவு கலந்த கதையாக டைம் டிராவலை மையமாக கொண்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது.
அதன் பின் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கி வரும் ‘டூட்’ (DUDE) படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் வெளியீடாக வெளிவரவிருக்கும் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இப்படத்தை அடுத்து, பிரதீப் ரங்கநாதன் மீண்டும் படமொன்றை இயக்கி நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை ஏஜிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அறிவியல் புனைவு வகையில் இப்படத்தின் திரைக்கதையினை எழுதி முடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் முதற்கட்டப் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளது படக்குழு.
இதையும் படிங்க: ஐந்து நாட்களைக் கடந்தும் 50 கோடியை கூட நெருங்காத ’தக் லைஃப்’ பட வசூல்!
இது தொடர்பாக பிரதீப் ரங்கநாதன் முன்பு நேர்காணல் ஒன்றில் இது பற்றி கூறியிருந்தார். அறிவியல் புனைவு வகைமையில் இந்த கதையின் திரைக்கதையை முன்னமே எழுதி முடித்துவிட்டேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த கதையில் நான் தான் நடிப்பேன் என அந்த நேர்காணலில் கூறியிருந்தார்.
முன்னதாக ‘லவ் டூடே’ படத்தினை இயக்கி நாயகனாக நடித்திருந்தார் பிரதீப் ரங்கநாதன். இது தான் அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதால் தொடர்ச்சியாக நாயகனாக நடித்து வருகிறார். தற்போது மீண்டும் இயக்குநராக களமிறங்க திட்டமிட்டு பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.