திண்டுக்கல்: பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, ராஜ்கிரண், ஐஷ்வர்யா லட்சுமி, சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்து கடந்த மே 16ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மாமன்’. திண்டுக்கல்லில் உள்ள உமா ராஜேந்திரன்
திரையரங்கில் நடிகர் சூரி நடித்துள்ள ’மாமன்’ திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இத்திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டத்தை காண நடிகர் சூரி வருகை தந்தார். இதனைத்தொடர்ந்து ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி, ”மாமன் குடும்பப் பாங்கான திரைப்படமாக அமைந்துள்ளது. ஏ பி சி என அனைத்து சென்டர்களிலும் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அதேபோல் வசூலும் பெரிய அளவில் உள்ளது. ஆகவே ரசிகர்களுக்கு நேரடியாக சென்று நன்றியை தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் நேரடியாக சென்று நன்றி தெரிவித்து வருகின்றேன்.
படம் முடிந்த பின்பு குழந்தைகள் முதல் ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் மாமன், தம்பி என உறவு முறையுடன் கலந்துவிட்டதாக நெகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர். குடும்பம் சார்ந்த படங்களுக்கு மக்கள் ஆதரவு தருகின்றனர். இது போன்று திரைப்படங்கள் நடிக்க வேண்டுமென விரும்புகின்றனர். வருடத்திற்கு ஒரு படமாவது இது போன்று குடும்ப படம் நடிக்க விரும்புகிறேன். உறவு சார்ந்த படம் என்றைக்குமே வெற்றியை கொடுக்கும் என்பதை இப்படம் உறுதிப்படுத்தி உள்ளது.
நகைச்சுவை கதாபாத்திரம் அல்லது கதாநாயகன் இதற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள் என்ற கேள்விக்கு, ”தொடர்ந்து
கதை நாயகன் நடித்து வெற்றி படமாக வந்து கொண்டுள்ளது. மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் நான் அங்கு இருக்க வேண்டுமா? இங்கு இருக்க வேண்டுமா? மக்கள் வரவேற்பு இல்லாமல் இங்கு நான் வந்து அமர முடியாது.
கதை நாயகனாக இருந்தாலும், நகைச்சுவை கொடுக்க வேண்டும். நகைச்சுவைக்கு தனி உருவம் கிடையாது” என கூறினார்.
பெரிய நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, ”கதை நாயகனாக நடிப்பது எனது சினிமா பயணம். அதற்கு எந்த இடையூறும் இல்லாமல், கேரக்டர் முக்கியத்துவம் இருந்தால் நடிப்பேன். ஏனென்றால் அவர்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். எனக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் நடிப்பேன்” என கூறினார்.
இதையும் படிங்க: மீண்டும் தனுஷுடன் இணையும் வெற்றிமாறன்... தயாரிப்பாளர் யார் தெரியுமா?
படம் வெளியாகி ஓரிரு நாட்களிலே சமூக வலைதளங்களில் படம் லீக்காவது என்ற கேள்விக்கு, ”கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிப்பாளர்கள், திரைப்பட பணியாளர்கள் பெரும் போராட்டத்திற்கு பின் படத்தை வெளியிடும் போது படம் சரியாக மக்கள் மனதில் இடம்பெறுமா என தெய்வங்களை வழிபட்டு வெளியிடுகிறார்கள். ஆனால் திருட்டுத்தனமாக படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவது மனதிற்கு வேதனையாக உள்ளது. மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
அடுத்து ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறேன், இன்னொரு படம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் விரைவில் அறிவிப்புகள் வரும்” என தெரிவித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.