திருச்சி: இன்றைய காலகட்டத்தில் நடிப்பில் ஆர்வம் இருப்பவர்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப் வீடியோக்களில் தங்களது தனித் திறமையைக் காட்டி சினிமா வாய்ப்புகளைப் பெறுகின்றனர் என ‘பெருசு’ படத்தை திரையரங்கில் காண வந்த நடிகர் பால சரவணன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சோனா மீனா திரையரங்கத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 14) வெளியானது "பெருசு" (Perusu) திரைப்படம். இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் வெளியான பெருசு படத்தில் நடிகர் வைபவ், சுனில் ரெட்டி, நிஹாரிகா, சாந்தினி தமிழரசன், பால சரவணன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் நடித்த நடிகர் பால சரவணன் நேற்று (மார்ச் 15) ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பதற்காக வருகை தந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திரைப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் ஆதரவுடன் பெருசு திரைப்படத்தைப் பார்த்து வருகின்றனர். திருச்சியில் ரசிகர்களுடன் அமர்ந்து இத்திரைப்படத்தைப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரசிகர்கள் ரசித்து திரைப்படத்தைப் பார்த்தனர். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவரும் இத்திரைப்படத்தைப் பற்றி ரசிகர்களுக்குத் தெளிவாகக் கூறிவிட்டனர்.
இது ஒரு அடல்ட் காமெடி குடும்ப திரைப்படம். திரைப்படத்திற்கு வந்திருந்த அனைவருமே 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான். அனைவரும் அடல்ட் நகைச்சுவையை ரசித்துப் பார்த்தனர். படம் ஓடிக் கொண்டிருக்கும் அனைத்து இடங்களிலும் இந்த நகைச்சுவைகள் முகம் சுளிக்க வைக்காமல், ரசிக்கும்படி இருந்தது என ரசிகர்கள் கூறியது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெற்றியைக் கொடுத்த மக்களுக்கும், திரைப்படத்தின் வெளியீட்டை ரசிகர்களிடம் சிறப்பாகக் கொண்டு சேர்த்த பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி. தற்போது நான் நடித்துள்ள 7 படங்கள் ரிலீசுக்காக தயார் நிலையில் உள்ளது. இன்னும் 7 படங்கள் படப்பிடிப்பில் உள்ளது. தற்பொழுது, திருச்சிக்கு 'மாமன்' படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன். 'விலங்கு' வெப்சீரீஸ் இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டிய ராஜன் மாமன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரன் மற்றும் நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். மேலும் நடிகை நயன்தாரா உடன் "மண்ணாங்கட்டி" திரைப்படத்தில் நடித்துள்ளேன். இந்த திரைப்படம் வரும் வாரங்களில் வெளியாக உள்ளது. திரைத்துறையில் தொடர்ந்து நம்முடைய உழைப்பைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: இந்திராகாந்தி சுயசரிதை முதல் தன் பாலின காதல் கதை வரை... இந்த வார ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்! |
நாங்கள் வாய்ப்புத் தேடும் போது பல்வேறு அலுவலகங்களுக்கு ஏறி, இறங்கி புகைப்படங்களை கொடுத்து வாய்ப்பு தேடினோம். ஆனால், தற்போது அப்படியில்லை. இன்ஸ்டாகிராம், யூடியூப் வீடியோக்களை போட்டு அதன் மூலம் வாய்ப்பு தேடுகின்றனர். சமூக வலைத்தளங்களில் என்னிடம் தனித்திறமை உள்ளது என சொந்த முயற்சியால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறார்கள்.
என்னைச் சரியான இடத்தில் நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என அவர்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப் வீடியோ மூலம் காண்பித்து வாய்ப்புகள் பெற்று பலர் வெற்றி அடைந்துள்ளனர். பெருசு திரைப்படம் ஆரம்பிக்கும் போது, இந்த படத்திற்குத் தலைப்பு வைக்கவில்லை படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது தான் இந்த படத்தின் தலைப்பை இயக்குநர் கூறினார். இதைவிட பொருத்தமான தலைப்பு இந்த படத்திற்கு இருக்க முடியாது,” எனத் தெரிவித்தார்.