சென்னை: பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமீர்கான், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அது என்ன மாதிரியான படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஐந்து படங்களை இயக்கியிருந்தாலும் ‘விக்ரம்’, ’லியோ’ படத்திற்கு பின் தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குநராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் அறியப்படும் இயக்குநராக உருவெடுத்துள்ளார். தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தில், தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, கன்னட திரை உலகில் இருந்து உபேந்திரா, மலையாளத்தில் இருந்து சௌபின் ஷாகிர், மற்றும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.
இப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகராக அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
’கூலி’ படத்திற்கு பிறகு கைதி 2 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். டிசம்பரில் இருந்து படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கமலுடன் விக்ரம் 2, சூர்யாவுடன் ரோலக்ஸ் என வரிசையாக படங்களை கைவசம் வைத்துள்ளார் லோகேஷ்.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் படக்குழுவினருடன் தரிசனம் செய்த நடிகர் சூர்யா!
இந்த நிலையில், அமீர்கான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அமீர்கான், “லோகேஷ் கனகராஜும் நானும் ஒரு படத்தில் இணைகிறோம். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஆக்ஷன் சூப்பர் ஹீரோ வகையான படமாக இருக்கும். அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் இப்படத்திற்கான பணிகள் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அமீர்கான் குறிப்பிட்ட சூப்பர் ஹீரோ கதையானது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த ’இரும்பு கை மாயாவி’ திரைப்படமாக இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் பல்வேறு நேர்காணல்களில் கூறிவரும் சூப்பர் ஹீரோ கதை அது தான்.
'இரும்பு கை மாயாவி' எனும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் தனது கையை இழந்து, ஒரு உலோக கை பொருத்தப்பட்டு, அதைக்கொண்டு தீய சக்திகளுடன் போராடக்கூடியது. இத்திரைப்படமும் லோகேஷ் கனகராஜின் சினிமா உலகமான LCU யூனிவர்சில் இந்த படம் இடம்பெறுமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே இருக்கிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.