ETV Bharat / education-and-career

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு 'குட் நியூஸ்'! 727 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 27, 2025 at 11:23 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கூடுதலாக 727 காலிப் பணியிடங்களை சேர்த்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNPSC) சார்பில், பல்வேறு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப்-4 தேர்வு, கடந்த ஜூலை 12 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதிலும் 4,922 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதற்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 238 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த நிலையில், 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வினை எழுதினர். இதனையடுத்து, குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் எனவும் தேர்வாணையம் அறிவித்தது.

727 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு

இந்த நிலையில், ஜூலை மாதம் நடந்த குரூப்-4 தேர்வில் கூடுதலாக 727 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மொத்த காலிப்பணியிடங்கள் 4 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: TN SET தேர்வர்கள் கவனத்திற்கு... 6 மாதங்களுக்கு பிறகு வெளியான தேர்வு முடிவு!

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ குரூப்-4 தேர்வு மூலம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் 2022-ஆம் ஆண்டு அறிவிக்கையில், 3 நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்கள், 2024-ஆம் ஆண்டு அறிவிக்கையில், 2 நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்கள் என மொத்தம் 5 நிதியாண்டுகளுக்கு 17,799 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 3,560 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

2025-ஆம் குரூப்-4 தேர்வு மூலம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 4,456 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில், சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (3560) ஒப்பிடும்போது, 2025-ஆம் ஆண்டில் கூடுதலாக 896 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

மேலும் 2025-ஆம் ஆண்டு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத் துறை நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.