ETV Bharat / education-and-career

TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்! டிஎன்பிஎஸ்சி தலைவர் கொடுத்த அப்டேட்!!

2026ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணை டிசம்பர் மாத்திற்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தேர்வு எழுதும் காட்சி
மாணவர்கள் தேர்வு எழுதும் காட்சி (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 28, 2025 at 5:30 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 9,725 பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில், உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், வனவர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், இந்து சமய அறநிலையத்துறையில் செயல்நிலை அலுவலர், தணிக்கை அலுவலர், சார்பதிவாளர் நிலை 2, நன்னடத்தை அலுவலர் உள்ளிட்டவை அடங்கிய 645 பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வுகள் இன்று (செப்.28) காலை 9.30 மணிக்குத் தொடங்கியது.

இதற்காக, மொத்தம் 1,905 தேர்வு மையங்களில் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் பங்கேற்றனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் சென்னை, சேத்துப்பட்டு ஹரிங்டன் சாலை ஷெர்வுட் ஹால் சீனியர் செகண்டரி பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்டர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குரூப்-2 தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது. சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 645 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 விண்ணப்பித்துள்ளனர். ஓஎம்ஆர் கேள்வித்தாள் முறையில் நடைபெறும் இத்தேர்வில் 200 கேள்விகள் இடம்பெறும். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வுகள் 2026 மார்ச் மாதம் நடைபெறும்.

டிஎன்பிஎஸ்சி இந்த ஆண்டு 7 அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் 6 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், குரூப்-4 ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. குரூப் 4 பணியிடங்களில் 3,935 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. நேற்று கூடுதலாக 727 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 4,662 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவர்களுக்கான தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.

2026ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி-யின் கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அது டிசம்பர் மாத்திற்குள் வெளியிடப்படும். 2024ஆம் ஆண்டு 10,701 பணியிடங்கள் நிரப்பப்பட்டது. 2025 ஆகஸ்ட் மாதம் வரை 15,504 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், மேலும் 9,725 பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு 'குட் நியூஸ்'! 727 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு!

தொடர்ந்து பேசிய அவர், "வினாத்தாள் பல கட்டமாகத் தயாரிக்கப்பட்டு, பலமுறை பரிசீலனை செய்யப்படுகிறது. இருந்தாலும், மொழிபெயர்ப்பில் பிழை வந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற தவறுகளை சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். பிழைகள் ஏற்படும்போது, மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசுப் பணியிடங்களையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டேதான் இருக்கிறோம்.

பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் உள்ள பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்று அத்துறைகள் கேட்கும்போது, தேர்வு செய்து அளிக்கிறோம். அந்த வகையில், பல்கலைக்கழகங்களில் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உயர் கல்வித்துறை தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்த பணியிடங்களும் நிரப்பப்படும். கலந்தாய்வு நடைபெறும் பொழுது எந்தெந்த துறைகளில் காலி பணியிடங்கள் உள்ளன என்ற விபரங்கள் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.