ETV Bharat / education-and-career

குரூப் 2 தேர்வு தேதியை அறிவித்த டிஎன்பிஎஸ்சி! மொத்த காலிப்பணியிடங்கள் எவ்வளவு?

குரூப் 2 தேர்வுக்கு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 15, 2025 at 2:10 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: 645 காலிப்பணியிடங்கான குரூப் 2 முதல்நிலைத் தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 2 -க்கு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையில் நடைபெறும் எனவும், இத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் அறிவிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

அதன்படி, 2025- ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளுக்குப் பின்னர், விண்ணப்பத் திருத்தச் சாளரம் 18.8.2025 முதல் 20.8.2025 வரை மூன்று நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும். இக்காலத்தில் தேர்வர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை திருத்தம் செய்ய இயலும்.

விண்ணப்பத் திருத்தச் சாளரக் காலம் முடிந்த பின்னர் இணையவழி விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. தமிழ்நாடு வனச்சார்நிலை பணி மற்றும் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் ஆகியவற்றில் உள்ள வனவர் பதவிகளுக்கான தேர்வு பரிசீலிக்கப்பட வேண்டுமெனில், அவர்களது விருப்பத்தினை இணையவழி விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு நடைபெறும் மையங்களில் செல்ஃபோன், கைக்கடிகாரம் (Smart Watches), ப்ளுடூத் அல்லது தகவல் தொடர்பு சாதனங்கள் அல்லது தகவல்தொடர்பு சாதனமாக பயன்படுத்தத்தக்க துணைக் கருவிகளை தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் கொண்டுவர அனுமதியில்லை.

தேர்வாணையத்தின் தேர்வுகள் அனைத்தும் தேர்வரின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம் மிகவும் கவனமாக இருக்குமாறு தேர்வர்களைத் தேர்வாணையம் எச்சரிக்கிறது. இதுபோன்ற தவறான மற்றும் நேர்மையற்றவர்களால் தேர்வர்களுக்கு ஏற்படும் எவ்வித இழப்புக்கும் தேர்வாணையம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது.

இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் அனைத்துத் தகவல்களுக்கும் தேர்வரே முழுப் பொறுப்பாவார். தேர்வர்கள், தேர்விற்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது ஏதேனும் தவறு ஏற்படின் அதற்கான இணைய சேவை மையங்களையோ, பொது சேவை மையங்களையோ குற்றம்சாட்டக்கூடாது. தேர்வர்கள் பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தினை இறுதியாக சமர்ப்பிக்கும் முன்னர் நன்கு சரிபார்த்த பின்னரே சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.