சென்னை: தொடக்கக் கல்வித்துறையில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் பள்ளிக்கு வருகைப் புரிந்து மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் நரேஷ் தெரிவித்துள்ளார்.
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் குறித்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் நரேஷ் அனுப்பிய கடிதத்தில் இதை குறிப்பிட்டுள்ளார்.
அவரது கடிதத்தில், “தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு நடைபெற்று வருகின்றது. ஒன்று முதல் 3-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 11-ஆம் தேதி வரையிலும், 4-ஆம் வகுப்பு, 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 17-ஆம் தேதியும், 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ஆம் தேதியும் தேர்வுகள் நிறைவடைகின்றன.
ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டபடி, வகுப்பு வாரியாக தேர்வுகள் முடிந்த பின்னர், அந்த மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டு பணி, அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணி போன்ற நிர்வாகப் பணிகளை ஏப்ரல் 30ஆம் தேதி வரை எல்.கே.ஜி (LKG), யூ.கே.ஜி (UKG) வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க |
மேலும், ஆண்டு இறுதி தேர்வின் தேர்ச்சி அறிக்கைக்கு ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் அனைத்து பள்ளிகளும் ஒப்புதல் பெற்றிட வேண்டும். அந்த விபரங்களை மே ஒன்றாம் தேதி தேதி முதல் EMIS இணையதளத்தில் மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வானது மார்ச் 3-ஆம் தேதித் தொடங்கி, மார்ச் 25-இல் நிறைவடைந்தது. முறையே ஏப்ரல் 15 அன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்த நிலையில், 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல்-24 அன்று தேர்வுகள் நிறைவடைகின்றன.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.