சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 16) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
இன்று காலை தமிழ்நாடு சட்டப் பேரவை கூடியவுடன், அமைச்சர்கள் மூவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இந்த தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அதிமுக எம்எல்ஏக்கள் கோரினர். ஆனால் இன்று மற்ற அலுவல்கள் உள்ளதாகக் கூறி இக் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் அப்பாவு மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள், அக் கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த அமைச்சர் கீதா ஜீவன், ''2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தில் 1,545 பள்ளிகளில் முதல் கட்டமாக துவங்கப்பட்டது. கிராமப்புற பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
இதையும் படிங்க: 300 வீடுகளுக்கு வக்ஃப் வாரியம் நோட்டீஸ்: ''நிலம் யாருக்கு சொந்தம்?" - மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
மேலும், மாநிலத் திட்டக்குழு அறிக்கையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் குழந்தைகளின் பள்ளி வருகை அதிகரித்துள்ளதோடு, ஊட்டச்சத்து அதிகரித்து ஆரோக்கியமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வகுப்பறையில் குழந்தைகள் அதிக ஈடுபாடு கொள்வதாகவும், கல்வித்திறன் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போது முதலமைச்சர் காலை உணவு திட்டம் 34 ஆயிரத்து 987 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதோடு அதன் மூலம் 17.53 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருவதாகவும் அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
மேலும், வரும் ஜூன் மாதம் முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் அரிசி உப்புமாவிற்கு பதிலாக மாணவர்களுக்கு பொங்கல், சாம்பார் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.