திருச்சிராப்பள்ளி: கன்னட மொழி குறித்து சர்ச்சை பேச்சு விவகாரத்தில், கமல் சொல்லியதில் எந்த தவறும் இல்லை; தமிழில் இருந்து தான் அனைத்து மொழியும் வந்தது என அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாகப் பேசியுள்ளார்.
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் அரசு மாநகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி இரண்டும் ஒரே வளாகத்திற்குள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 644 மாணவ, மாணவியர்களும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 841 மாணவ, மாணவியர்களும் என மொத்தமாக 1,485 பேர் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மூலம் இந்த பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த இரண்டு பள்ளிகளும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருவதால், வகுப்பறை பற்றாக்குறை இருப்பதால், உயர்நிலைப் பள்ளியை வேறு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

போதிய வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் சிரமப்படுவதால், உயர்நிலைப் பள்ளியினை இடமாற்றம் செய்வதற்கு எடமலைப்பட்டிபுதூர் ராஜீவ் காந்தி நகரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர், மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூ.18.41 கோடி மதிப்பீட்டில், 2.91 ஏக்கர் பரப்பளவில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, இன்று மாணவர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பள்ளி வளாகத்தில் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் மொத்தம் 36 வகுப்பறைகள், 2 நிர்வாக அலுவலக அறைகள், 2 ஆசிரியர் அறைகள், ஒரு நூலகம், 3 ஆய்வகங்கள் மற்றும் 4 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் 1,620 மாணவ, மாணவியர்கள் பயன்பெற உள்ளனர்.
அதே போல, திருச்சி பிராட்டியூரில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ரூ.485 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.
இதனை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பயிற்சி முடிந்து தாயகத்தை காக்க புறப்படும் 551 அக்னி வீரர்கள்! நெகிழ வைக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சி! |
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “கரோனா பரவலைத் தடுக்க, முதலமைச்சரின் அறிவுரைப்படி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, திருச்சி அரசு அரசு மருத்துவமனையில் கூட கரோனாவுக்காக தனியாக பத்து படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது, என்றார்.
கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கமல் கூறியதில் எந்த தவறும் இல்லை. தமிழிலிருந்து தான் தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளும் வந்துள்ளன. ஆகையால், அவர் சொல்லியதில் எந்த தவறும் இல்லை, நீதிபதி வேண்டுமென்றே அவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். அதே போல், தமிழிசை அப்படி தான் தான் எதாவது சொல்லுவார். அண்ணாமலைக்கு வேறு வேலை இல்லை, அவரும் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார், எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தற்போதுள்ள கரோனாவின் வீரியம் குறைவுதான் என மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இருந்தாலும், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆகையால், மக்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. பள்ளிகளில் தேவைப்பட்டால் முகக் கவசம் அணிந்து கொள்ள அறிவுறுத்துவோம்,” எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்