சென்னை: கல்வி கட்டண நிர்ணய குழு அனுமதித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடாது என தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண வரம்பை, தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய குழு தீர்மானிக்கிறது. தனியார் பள்ளிகள், எந்தெந்த வகுப்புக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என இக்குழுவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தனியார் பள்ளிகள் தங்களுக்குரிய கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அதனை மீறி தனியார் பள்ளிகள் தொடர்ந்து கூடுதலாக கட்டணம் வாங்குவதாக புகார்கள் எழுந்து வருகிறது. கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்தால், அதனை விசாரணை செய்து அந்த கட்டணத்தை திருப்பப் பெற்று தருவதற்கு தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் நிர்ணய குழு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மாவட்டக் தனியார் பள்ளிகள் கல்வி அலுவலருக்கு கொடுங்கையூர், முத்தமிழ் நகரில் உள்ள வேளாங்கன்னி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் அதிகமாக கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. அந்த பள்ளி சம்பந்தப்பட்ட கல்விக் கட்டண விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டி, தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், “நடப்பு கல்வியாண்டில் (2025-2026) 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடம், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணம் ரூ.32,670-ஆக இருக்கும் நிலையில், கூடுதலாக ரூ.57,000 கல்விக் கட்டணமாகவும், சேர்க்கை கட்டணமாக ரூ.10,000 வசூலிப்பதாகவும் புகார் மனு பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேல் கூடுதலாக எவ்விதத் தொகையும் வசூலிக்கக் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தங்கள் பள்ளியில் கூடுதலாக கட்டணம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்ட புகார் மனு மீது உரிய ஆவணங்களுடன் கூடிய தன்னிலை விளக்கக் கடிதத்தினை ஜூன் 5-ஆம் தேதி காலை 11 மணிக்குள் இவ்வலுவலகத்தில் தனிநபர் மூலம் நேரில் சமர்பிக்குமாறு சார்ந்த பள்ளித் தாளாளருக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
புகார் சார்பாக உரிய ஆவணங்களுடன் தன்னிலை விளக்கம் சமர்பிக்கப்படாத நிலையில் தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்து சட்டம் 2023-ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி கட்டண நிர்ணயம்
பொதுவாக தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண வரம்பை, ‘தனியார் பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணய குழு’ தீர்மானிக்கிறது. ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கு இந்த கட்டண வரம்பு மாறுபடும். அதாவது, ஒரு பள்ளியின் வருவாய், மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களுக்கான ஊதியம், பள்ளியின் இன்னபிற செலவுகளை தணிக்கை செய்து ‘கல்வி கட்டண நிர்ணய குழு’ சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், வங்கிகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளை உட்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட தணிக்கையாளர் வாயிலாக அறிக்கையை இணைத்து கட்டண நிர்ணயம் பெற வேண்டும். அப்படி கொடுக்கப்படும் தரவுகளைக் கொண்டு ‘கல்வி கட்டண நிர்ணய குழு’ ஒரு கட்டண வரம்பை குறிப்பிட்ட பள்ளிக்கு வழங்கும். இது ஒவ்வொரு பள்ளிகள் வழங்கும் தரவுகளுக்கு ஏற்ற வகையில் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.