ETV Bharat / education-and-career
12 ஆம் வகுப்பு தனித்தேர்வு எழுதி மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாதோர் கவனத்திற்கு... வெளியானது முக்கிய அறிவிப்பு!
உரிமை கோராத தனித்தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு, மேலும் மூன்று மாத காலம் அவகாசம் நீட்டப்பட்டுள்ளது.

Published : October 8, 2025 at 3:33 PM IST
சென்னை: 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பெறாவிட்டால் அந்த சான்றிதழ்கள் அழிக்கப்படும் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சசிகலா அறிவித்துள்ளார்.
இது தொடப்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை பள்ளி மாணவர்கள் மட்டுமில்லாமல் தனி தேர்வர்களும் எழுதி வருகின்றனர். இவ்வாறு எழுதும் தேர்வர்களுக்கு அரசுத் தேர்வுத் துறை சார்பில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில பாடத்தில் 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரை மார்ச், ஜூன், செப்டம்பர் என அனைத்து பருவங்களுக்குரிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை 3 மாதத்திற்குள் பெற்றுக் கொள்ளாவிட்டால் அழிக்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியானது. மேலும், அதற்கான கால அவகாசமாக அக்டோபர் 10 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது 2026 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி வரை இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி உரிமைக்கோராத (கேட்டுப் பெறாத) தனித்தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு, மேலும் மூன்று மாத காலம் அவகாசம் நீட்டப்பட்டுள்ளதால், தனிதேர்வர்கள் கல்லூரிச் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை என்ற முகவரியில் உள்ள அலுவலர்களை அணுகி தேர்வு சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம். மேலும், மதிப்பெண் சான்றிதழ் அழிக்கப்பட்ட பின்னர் மீண்டும் கேட்டால் நகல் மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்.
அதே போல், தனித்தேர்வர்கள் இந்த அலுவலகத்தை உரிய ஆளறிச் சான்றுடன் நேரில் அணுகியோ அல்லது கீழ்க்கண்ட அலுவலருக்கு உரிய அத்தாட்சியுடன் (நுழைவுச்சீட்டு) ரூ.45 ரூபாய்க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட உறையுடன் விண்ணப்பித்து அவர் தம் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம். கால அவகாசம் நிறைவடைந்த பின்னர் எவ்வித அறிவிப்புமின்றி மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சசிகலா தெரிவித்துள்ளார்.

