ETV Bharat / education-and-career
பிஇ, பிடெக் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது... கல்லூரிகளை தேர்வு செய்ய மாணவர்கள் ஆர்வம்!
2025-26ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 417 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 52 ஆயிரத்து 467 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Published : July 14, 2025 at 10:53 AM IST
சென்னை: பிஇ, பிடெக் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று (ஜூலை 14) தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு மே 7 முதல் ஜூன் 6 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 27ஆம் தேதி வெளியிட்டப்பட்டது. பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க 3,02,374 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் பதிவுக்கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 2,50,298. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 40,645 கூடுதலாகும்.
நடப்பாண்டில் 2,41,641 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 47,372 மாணவர்களுக்கு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7 மற்றும் ஜூலை 8ஆம் தேதி நடைபெற்றது.
இதில் மாற்றுதிறனாளிகள் பிரிவில் 128 மாணவர்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 9 பேரும், விளையாட்டு பிரிவில் 356 பேரும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மாற்றுத்திறனாளி பிரிவில் 80 இடங்களும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 37 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 8 பேருக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான இட ஒதுக்கீடு கலந்தாய்வு ஜூலை 9 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், பொது கலந்தாய்வு இன்று முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் தரவரிசை அடிப்படையில் கல்வியியல் பிரிவில் 39,145 பேரும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு 2,662 பேரும், தொழிற்கல்விப் பிரிவில் 2342 பேரும், அரசுப் பள்ளி மாணவர்கள் 524 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஜூலை 14 முதல் 16ஆம் தேதி மாலை 5 மணி வரையில் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம். 17ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக ஒதுக்கீடு செய்யப்படும். அதனை 18ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதிச் செய்ய வேண்டும். 19ஆம் தேதி காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்கீடு வெளியிடப்படும்.
அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது வேறு கல்லூரி கிடைத்தால் ஏற்றுக் கொள்கிறேன் என்பதை பதிவு செய்யலாம். 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதிக்குள் கல்லூரியில் மாணவர்கள் சேர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
2025-26ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 417 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 52 ஆயிரத்து 467 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக 4 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மொத்தமுள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை 421 ஆக அதிகரித்துள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

