சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டிலும் 74 சதவீதத்திற்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதன் வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.
நாட்டின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம். சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் இந்தியா அளவிலும், சர்வதேச அளவிலும் இடம் பிடித்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
நாட்டின் பெருமைமிகு அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் ஆர்வம் உள்ளது. இதற்கு அங்குள்ள குறைந்த கட்டணம், கல்வியின் தரம் மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள வசதிகள் மட்டுமல்ல, கேம்பஸ் இன்டர்வியூ என அழைக்கப்படும் வளாக நேர்காணல் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தால், படிப்பை முடிப்பதற்குள் வேலை கிடைத்துவிடும் என்பதால் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் முதல் தேர்வாக அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து விளங்கி வருகிறது.
மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதற்காக தொழிற்சாலைகள் ஒருங்கிணைப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம், மாணவர்களிடம் தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் பணித் திறன்களை வளர்த்து, கணிசமான சம்பளத்தையும் வாங்கித் தருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி ஆகியவற்றில் பொறியியல் படிப்பில் இளநிலையில், 2022-23 ம் கல்வியாண்டில் படித்த 1998 மாணவ, மாணவிகளில் 1450 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

அதாவது 72.6 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். ஆனால், முதுநிலைப் படிப்பில் 930 மாணவர்கள் படித்ததில் 392 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. இது 43.4 சதவீதமாகும். 2022-23-ம் கல்வியாண்டில் மொத்தம் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 1842. அப்போது ஆண்டு சராசரி ஊதியம் ரூ.8.54 லட்சம் (மாதத்திற்கு ரூ.72,000) என இருந்தது.
தொடர்ந்து 2023 - 24-ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் இளநிலையில் படித்த 1406 மாணவர்களில் 958 பேருக்கு வேலை கிடைத்தது. இது 68.1 சதவீதமாகும். முதுநிலை படிப்பில் 713 மாணவர்கள் படித்ததில் 309 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றனர். இது 43.3 சதவீதமாகும். ஆண்டு சராசரி ஊதியம் ரூ.9.34 லட்சம் (மாதத்திற்கு ரூ.78,000).
நடப்பு கல்வி ஆண்டான 2024-25-ல் இறுதி வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் கடந்த ஆகஸ்ட் முதல் நடைபெற்று வருகிறது. ஜூலை மாதம் வரை இந்த முகாம் நடைபெறவுள்ள நிலையில், இளநிலையில் 1754 மாணவ, மாணவிகளில் இதுவரை 779 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அதாவது 44.4 சதவீதம். முதுநிலை படிப்பில் 837 மாணவ, மாணவிகளில் 232 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அதாவது 27.7 சதவீதம்.
உயர்ந்த ஆண்டு சராசரி சம்பளம்
ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஆண்டு சராசரி சம்பளம் கணிசமாக உயர்ந்தது தான். கடந்த 2022-23-ல் ரூ.8.54 லட்சமாகவும், 2023-24-ல் இது ரூ.9.34 லட்சமாகவும் இருந்த நிலையில், தற்போது ஆண்டு சராசரி சம்பளம் ரூ.10.78 லட்சமாக (மாதத்திற்கு சுமார் ரூ.90,000) உயர்ந்துள்ளது.
மவுசு குறையாத கோர் பிரிவுகள்
கேம்பஸ் இண்டர்வியூக்கள் குறித்து அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் சண்முக சுந்தரம் ஈ.டிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "வேலைக்கு அதிகளவில் மாணவர்களை தேர்வுச் செய்யும் நிறுவனங்கள் ஆண்டிற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை தான் சம்பளம் நிர்ணயிக்கின்றன. ஆண்டு சராசரி சம்பளம் 2021-ல் ரூ.6 லட்சமாக இருந்ததை நடப்பாண்டில் ரூ.10.78 லட்சமாக உயர்த்தி உள்ளோம்.
ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் தர விரும்பும் நிறுவனங்களில் சேர மாணவர்கள் விரும்புவதில்லை. டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் தனியார் கல்லூரியில் மாணவர்களை தேர்வுச் செய்து விட்டதால், விரைவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கு வருகை தர உள்ளனர். இதனால் கடந்தாண்டை விட வேலைவாய்ப்பு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

தகவல் தொழில்நுட்பத் துறையிலும் திறன் பார்ப்பதால், மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல் படிக்கும் மாணவர்களும் ஏஐ தொழில்நுட்பத்தை படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பைத்தான் அல்லது வேறு கம்ப்யூட்டர் தொடர்புடைய திறன் அளிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத்துறையில் மந்தநிலை ஏற்பட்டு, தற்பொழுது அவர்களும் பணிக்கு ஆட்களை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
முதுநிலை மாணவர்களுக்கான வாய்ப்பு குறைவாக இருப்பது ஏன்?
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இங்கு முதுநிலை படித்து முடித்த பின்னர் தனியான தொழில் துவங்குவது, வெளியே சென்ற பிறகு சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பின்னர் வேலைக்கு செல்வது, ஆராய்ச்சியில் ஈடுபடுவது போன்றவையே இதற்கு காரணம். இந்த ஆண்டு இளநிலை முடிக்கும் 80 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
நடப்பாண்டில் வேலைவாய்ப்பு முகாம் மூலம் குறைந்தப்பட்ச சம்பளம் ரூ.6.50 லட்சமாகவும், அதிகப்பட்சமாக ரூ.32 லட்சமாகவும் உள்ளது. கடந்தாண்டில் இருந்து ஜப்பான், ஜெர்மனி நாடுகளில் இருந்து நிறுவனங்கள் நேரடியாக வந்து மாணவர்களை வேலைக்கு எடுத்துச் செல்கின்றனர். தற்போது வளாக நேர்காணல் நடத்தும் ஜப்பான் நிறுவனம் ஆண்டிற்கு ரூ.18.50 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை சம்பளம் தர முன் வந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இணைப்பு பெற்ற கல்லூரிகள் "நான் முதல்வன்" திட்டம் மூலம் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன. பொறியியல் படிப்பில் மாணவர்கள் எந்தப் பிரிவை எடுத்தாலும் வேலைவாய்ப்பு இருக்கிறது,” எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.