மும்பை: வங்கிகளில் பெறும் நகைக் கடனுக்கு ஈடாக கொடுக்கப்படும் தங்கத்திற்கான மதிப்பை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடன்களுக்கு, தங்கத்தின் மதிப்பில் 85% கடனாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த நடைமுறையின்படி, ரூ.2.5 லட்ச ரூபாய் வரையிலான தங்க நகை கடனுக்கு ஈடாக, வாடிக்கையாளர் வழங்கும் நகையின் மதிப்பு 75% ஆகவே இருந்தது. அதாவது, நகையை அடமானம் வைத்து கடன் பெறும்போது, அந்த நகையின் 75% மதிப்பிற்கே பணம் வழங்கப்படும். எடுத்துக்காட்டாக 1,000 ரூபாய் மதிப்புள்ள நகையை அடகு வைக்க சென்றால், ரூ.750 மட்டுமே கடனாக வழங்கப்படும்.
ரிசர்வ் வங்கி தற்போது கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைப்படி, ரூ.2.5 லட்ச ரூபாய்க்கும் குறைவான கடன் தொகைக்கு ஈடாக வழங்கப்படும் தங்க நகைகளின் மதிப்பு 85% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகளுக்கு, ரூ.85,000 வரை வாடிக்கையாளர் கடன் பெறமுடியும். இதன் காரணமாக மக்கள் குறைந்த அளவு தங்க நகைகளை மட்டும் வங்கிக்கு ஈடாக கொடுத்தால் போதுமானது.
முறையே, ரூ.2.5 லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரையிலான தங்க நகைக்கடனுக்கு ஈடாக கொடுக்கும் நகைக்கு 80 விழுக்காடு மதிப்பும், 5 லட்ச ரூபாய்க்கும் மேல் கடன் பெறுவோரின் நகைக்கு 75% மதிப்பும் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கியின் (தங்கம் மற்றும் வெள்ளி மீதான கடன்) வழிமுறைகள் 2025-இன் படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நகைக்கடன் வழங்கும் வங்கிகளால் தீர்மானிக்கப்படும் வரம்பை விட அதிகமாக பலமுறை கடன்களை பெறும்பட்சத்தில், அது பணமோசடி தடுப்பின் (AML) கீழ் கண்காணிப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், தனிநபர் கணக்கில் ஒரு கிலோ எடை தங்கத்திற்கு அதிகமாகவோ, 10 கிலோ வெள்ளிக்கு அதிகமாகவோ பிணையம் பெற்று கடன் வழங்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க |
முன்னதாக, தங்க நகைக்கடன் பெற்றவர்கள், வட்டியை கட்டி அதனை புதுப்பித்து கொள்ளும் வசதி இருந்தது. சமீபத்தில் இதனை மாற்றியமைத்த ரிசர்வ் வங்கி, நகையை மீட்டு பின்னர் அதை புதிய கடன் கணக்கில் வைக்க வேண்டும் என்ற விதிமுறைகளை வகுத்தது. இது குறைந்த அளவு கடன் பெறும் சாமானியர்களை வெகுவாக பாதிக்கும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில், ஒன்றிய நிதி அமைச்சகமும் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியது.
அதில், குறைந்த அளவிலான தங்கநகைக் கடன் பெறும் நபர்கள் வட்டி தொகையை செலுத்தி, அதை புதுப்பித்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக ஜூன் 9-ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ரூ.2.5 லட்ச ரூபாய் வரையிலான தங்க நகைக்கடன் பெறுவோரின் கடன் வரலாற்றை இனி சரிபார்க்க அவசியமில்லை என ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.