மும்பை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6.25% இருந்த ரெப்போ வட்டியில், 0.25% குறைக்கப்பட்டு 6 விழுக்காடாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால், வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பெறும் வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவைகளுக்கு வட்டி விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்ற பின், அவர் தலைமையிலான முதல் நிதிக் கொள்கை குழு ஆலோசனை கூட்டம் பிப்ரவரி 5 அன்று நடைபெற்றது. அதனையடுத்து பிப்ரவரி 7 அன்று 6.5% இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது.
தற்போது மீண்டும் 0.25 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது கடன் வாங்குபவர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. என்னதான், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரிவிதிப்பு உலக பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்தாலும், இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கான முயற்சிகள் தொடர்கிறது.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி 2025-26 நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை 6.7 விழுக்காட்டிலிருந்து 6.5 விழுக்காடாக குறைத்துள்ளது. அதேபோல், இந்தியாவின் பணவீக்க கணிப்பும் 4.2 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக குறைக்கப்பட்டு, 2% முதல் 6% இலக்கு வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.