டிரம்பின் 50% வரி விதிப்பு இந்தியாவில் எந்தெந்த துறைகளை பாதிக்கும்?
அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய வரிவிதிப்பால் ஆடைகள் தயாரிப்பு தொடர்புடைய துறைகள் பெரிய பாதிப்பை சந்திக்கும் என்று தொழில் துறை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


Published : August 8, 2025 at 2:28 PM IST
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் 50% வரி விதிப்பால் ஆடை, தோல், ரசாயனங்கள், காலணிகள், ரத்தினங்கள், நகைகள் மற்றும் இறால் உள்ளிட்ட பல உள்நாட்டு ஏற்றுமதித் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தொழில்துறை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் முதல், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை விமர்சித்த டிரம்ப், கூடுதலாக 25% வரிவிதித்து உத்தரவிட்டார்.
இதனால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 50% வரை வரி விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கையால், அமெரிக்காவில் இந்தியப் பொருட்களின் விலை அதிகளவில் உயரும் என உலக வர்த்தக ஆராய்ச்சி முயற்சி (GTRI) எனும் சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது.
புதிய வரிவிதிப்பின் மூலம், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் கூடுதலாக 54% சுங்க வரியை பெறுகிறது. பிற துறைகளை பொருத்தவரை, தரைவிரிப்புகளுக்கு 52.9%, ஜவுளிக்கு 59%, தங்கம், வைரம் போன்ற ஆபரணப் பொருட்களுக்கு 52%, பின்னலாடைகளுக்கு 63.9%, நெசவு ஆடைகளுக்கு 60.3% எந்திரங்களுக்கு 51.3%, கட்டில், மெத்தை போன்றவற்றிற்கு 52.3% என வரி விதிக்கப்பட்டுள்ளது.
| இந்திய பொருள்கள் மீது அமெரிக்காவின் புதிய வரி விதிப்புகள் | |||||||
| எண் | பொருள்கள் | ஏற்றுமதி (கோடி ரூபாயில்) | அமெரிக்கா - இந்தியா ஏற்றுமதி பங்கு (%) | அமெரிக்கா MFN இறக்குமதி வரி (%) | புதிய டிரம்ப் | இந்திய ஏற்றுமதிக்கான மொத்த வரி (%) | இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கம் |
| 1 | இறால் வகைகள் | ரூ.1,66,000 | 32.4 | 0 | 50 | 50 | மிக அதிகம் |
| 2 | பெட்ரோலியம் பொருள்கள் | ரூ.3,40,300 | 4.3 | 6.9 | 0 | 6.9 | குறைவு |
| 3 | ரசாயன பொருட்கள் | ரூ.2,24,100 | 13.2 | 4 | 50 | 54 | மிக அதிகம் |
| 4 | மருந்துகள் | ரூ.8,13,400 | 39.8 | 0 | 0 | 0 | குறைவு |
| 5 | தரைவிரிப்புகள் | ரூ.99,600 | 58.6 | 2.9 | 50 | 52.9 | மிக அதிகம் |
| 6 | பின்னலாடை | ரூ.2,24,100 | 34.5 | 13.9 | 50 | 63.9 | மிக அதிகம் |
| 7 | நெசவு | ரூ.2,24,100 | 32.2 | 10.3 | 50 | 60.3 | மிக அதிகம் |
| 8 | தங்கம், வைரம் | ரூ.8,30,000 | 40 | 2.1 | 50 | 52.1 | மிக அதிகம் |
| 9 | ஸ்டீல், அலுமினியம், காப்பர் | ரூ.3,90,100 | 16.6 | 1.7 | 50 | 51.7 | அதிகம் |
| 10 | இயந்திரங்கள் | ரூ.5,56,100 | 20 | 1.3 | 50 | 51.3 | மிக அதிகம் |
| 11 | ஸ்மார்ட்போன்கள் | ரூ.8,79,800 | 43.9 | 0 | 0 | 0 | குறைவு |
| 12 | வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் | ரூ.2,15,800 | 11.4 | 1 | 25 | 26 | அதிகம் |
| 13 | மரசாமான்கள் | ரூ.91,300 | 44.8 | 2.3 | 50 | 52.3 | மிக அதிகம் |
| மொத்தம் | ரூ.46,84,700 | 19.8 | |||||
| இது GTRI தரவுகள் அடிப்படையிலான புள்ளிவிவரம் | |||||||
முன்னதாக ஜூலை 31- ம் தேதி் அறிவிக்கப்பட்ட இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீதான 25% வரி நேற்று (ஆகஸ்ட் 7) காலை 9:30 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல, நேற்று முந்தினம் அறிவிக்கப்பட்ட கூடுதல் 25% வரி, ஆக்ஸ்ட் 27-ஆம் தேதி முதல் அமெரிக்கா நடைமுறைக்கு கொண்டு வருகிறது.
அமெரிக்காவின் வரிவிதிப்பு பட்டியலில் இந்தியா மற்றும் பிரேசில் முதலிரண்டு இடங்களையும் பிடித்துள்ளன. நாடுகள் வாரியாக அமெரிக்க வரிவிதிப்பை கீழே காணலாம்.
ஏற்றுமதி பாதிக்கும்
அமெரிக்காவின் இந்த திடீர் வரிவிதிப்பால், சுமார் 55 விழுக்காடு அளவிலான ஏற்றுமதிப் பொருட்களை அனுப்புவதில் பிரச்சனை எழும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சி. ரால்ஹான் தெரிவித்துள்ளார்.
"50% வரி விதிப்பு செலவுச் சுமையை ஏற்படுத்தும். குறைந்த வரி விதிப்பை எதிர்கொள்ளும் நாடுகளை ஒப்பிடுகையில், நாம் அனுப்பும் பொருள்களுக்கு போட்டி விலை நிர்ணயம் செய்ய முடியாத சூழல் ஏற்படும். இதனால், ஏற்றுமதி செய்ய தயாராக இருக்கும் பொருட்களை வாங்குவதற்கு அமெரிக்க நிறுவனங்கள் தயக்கம் காட்டும். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பல ஆர்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன,” என்றும் தெரிவித்தார்.
| இதையும் படிங்க |
2024-25ஆம் நிதியாண்டில், இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தகம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.10.95 லட்சம் கோடியாக இருந்தது. இதில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.7.18 லட்சம் கோடியாகவும், இறக்குமதி ரூ.3.76 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தற்போதைய புதிய 50% வரிவிதிப்பு, ஆடை ஏற்றுமதியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என இந்திய துணி தொழிற்சங்க கூட்டமைப்பு (CITI) தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களாக இவை இருப்பதால், மொத்த ஏற்றுமதி சந்தையில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின் தொடருங்கள்.

