சென்னை: குறைந்த கட்டணத்தில் விரைவாகவும், வசதியாகவும், எளிதாகவும் பயணிக்கக்கூடிய வகையில் ரயில்கள் இருப்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை விரும்புகின்றனர். நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ரயில் பயணங்களை நம்பியே உள்ளனர். ஒருநாளைக்கு லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.
அதனால் ஒவ்வொரு பயணியின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய ரயில்வே புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ரயிலில் மிகக்குறைவான கட்டணத்துடன் முன்பதிவில்லா பெட்டிகள், முன்பதிவு செய்து அமர்ந்து செல்லும் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், மூன்றாம் வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி, முதல் வகுப்பி ஏசி பெட்டிகள் உள்ளன. ரயில் என்ற ஒரு போக்குவரத்து மூலம் தான் ஒரே வாகனத்தில் மிகக்குறைவான டிக்கெட் விலை முதல் மிக அதிகமான டிக்கெட் விலை பயணம் சாத்திமாகிறது.
விமானத்தில் கூட இவ்வசதிகள் இல்லை. இது மட்டுமில்லாமல் இன்னொரு அற்புதமான வசதியும் உள்ளது. ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்கும் பலருக்கும் ஏசி பெட்டியில் பயணிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். பண பற்றாக்குறை காரணமாக அந்த ஆசை நிறைவேறாமலே இருக்கும். அவர்களுக்காகவே குறைந்த விலை கட்டணத்தில், அதிக டிக்கெட் விலை கொண்ட ரயில் பெட்டியில் பயணிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது பற்றி பலருக்கு தெரிவதில்லை.
ஆன்லைனில் ரயில்களுக்கான டிக்கெட்டுகளை ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC - Indian Railway Catering and Tourism Corporation) இணையதளம் மூலம் நாம் முன்பதிவு செய்கிறோம். நாம் ஒரு வகுப்பில் முன்பதிவு செய்யும் போது, அந்த வகுப்பிற்கான டிக்கெட் தீர்ந்துவிட்டால், அடுத்தாக ஆர்.ஏ.சி-யிலும் (RAC - Reservation Against Cancellation), காத்திருப்போர் பட்டியலிலும் (waiting list) சேர்க்கப்படும். ஏற்கனவே டிக்கெட் கிடைத்தவர்கள் யாராவது அதை ரத்து செய்தால் அந்த இடம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
டிக்கெட் கட்டணம் அதிகம் என்பதால் பலரும் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு செய்வதில்லை. பெரும்பாலும் அங்கு சீட்டுகள் காலியாக இருக்கும். மாறாக ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் சீட்கள் நிரம்பியும், பலர் டிக்கெட் கிடைக்காமலும் இருப்பர். இதனால் ரயில்வேக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதைப் போக்கவே ரயில்வே நிர்வாகம் ஆட்டோ அப்கிரடேஷன் (Auto Upgradation) திட்டத்தை கொண்டு வந்தது.
ஆட்டோ அப்கிரடேஷன்: நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆட்டோ அப்கிரடேஷன் என்பதை தேர்வு செய்தால் போதுமானது. அவ்வாறு தேர்வு செய்யும் போது, ஒருவேளை நீங்கள் மூன்றாம் வகுப்பு ஏசியில் முன்பதிவு செய்திருந்தால், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் இடம் இருந்தால், உங்களுக்கு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் இடம் கிடைக்கும். ஒருவேளை நீங்கள் ஸ்லீப்பர் பெட்டியில் பதிவு செய்திருந்தால், மூன்றாம் ஏசி பெட்டியில் இடம் கிடைக்கும்.
இதற்கென நீங்கள் தனியாக பணம் செலுத்த வேண்டியது இல்லை. அதாவது ஸ்லீப்பர் பெட்டி பயணத்திற்கான கட்டணத்தில், மூன்றாம் ஏசி பெட்டியில் பயணம் செய்ய முடியும். அடுத்த முறை ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது ஆட்டோ அப்கிரடேஷன் என்பதை தேர்வு செய்ய மறந்துராதீங்க.
ஆட்டோ அப்கிரடேஷன் பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 139 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். அல்லது இந்த www.indianrail.gov.in இணையதளத்தை நாடுங்கள்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: இனி ரயில்கள் ஓடாது பறக்கும்..! 30 நிமிடத்தில் சென்னை to பெங்களூரு.. ஐஐடியின் ஹைப்பர்லூப் ஆராய்ச்சி - Chennai Hyperloop