டெல்லி: ஆளுநர்களிடம் இருந்து அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க, ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்த நிலையில், இது தொடர்பாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டதாக கூறி, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை நிறுத்தி வைப்பதற்கு எந்தவொரு வீட்டோ அதிகாரமும் ஆளுநருக்கு கிடையாது எனத் தெரிவித்த நீதிபதிகள், அவர் கிடப்பில் போட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தும் உத்தரவிட்டது.
அத்துடன் நிற்காமல், ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்தக் காலக்கெடுவை தாண்டும்பட்சத்தில் அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:
சட்டப்பிரிவு 142-ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஆயுத ஏவுகணையை போல நீதித்துறை பயன்படுத்துகிறது. ஜனாதிபதி பதவி என்பது நாட்டிலேயே மிக உயர்ந்த பதவி என்பதை யாரும் மறக்கக் கூடாது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பில் ஜனாதிபதி இருக்கிறார். அப்படி இருக்கையில், ஜனாதிபதிக்கே உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவு போடுகிறது. நம் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்?
இதையும் படிங்க |
ஏக்நாத் ஷிண்டே குறித்த விமர்சனம் - நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா முன்ஜாமீன் மனுவை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்! |
ஜனாதிபதிக்கு நீதிமன்றம் காலக்கெடு விதிக்கிறது என்றால், எதிர்காலத்தில் நீதிபதிகளே சட்டமியற்றுவார்கள். அதனை அவர்களே செயல்படுத்துவார்கள். உச்ச நீதிமன்றம் ஒரு சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படும். ஏனென்றால், நீதிபதிகள் தான் எந்த சட்ட வரையறுக்குள் வர மாட்டார் அல்லவா?
இப்போது கூட ஒரு நீதிபதியின் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. ஆனால், அவர் மீது எந்த எப்ஐஆரும் பதிவாகவில்லை. சம்பவம் நடந்து 7 நாட்கள் வரை இதுபற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா? என ஜக்தீப் தன்கர் கேள்வியெழுப்பினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.