By அமீர் தந்த்ரே
ஜம்மு: புதுமணத் தம்பதிகளின் கனவு பிரதேசமாக விளங்கி வருகிறது காஷ்மீர். அந்த வகையில் காஷ்மீருக்கு நேரடி ரயில் சேவை என்பது பல ஆண்டுகளாக மக்களின் கனவாக இருந்து வருகிறது. அந்த கனவு தற்போது நனவாகப் போகிறது. கட்ரா ரயில் நிலையத்தில் (வைஷ்ணவோ தேவி கோயில் அமைந்திருக்கும் பகுதி) இருந்து பரமுல்லா (எல்லைப் பகுதி) வரை இயக்கப்படவுள்ள இந்த ரயில் சேவையை ஏப்ரல் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை கொண்டு வருவதற்காக ரயில்வே துறையும், ஜம்மு, காஷ்மீர் மாநில நிர்வாகம் சார்பிலும் தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பிரதமர் அலுவலகத்திலிருந்து (PMO) இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால், ரயில் இயக்க தேதிக்காக காத்திருப்பதாக ரயில்வே அலுவலர்கள் ஈடிவி பாரத்திடம் தெரிவித்தனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநில தலைமைச் செயலாளர் அதல் டுல்லூ, செனாப் பாலம், கட்ரா ரயில் நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். ரயில்வே, காவல்துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் ஆலோசித்து, எந்த நேரத்திலும் அதிகாரப்பூர்வ தகவல் வரலாம் எனவும், அந்த நேரத்தில் ரயில் சேவைக்கான வேலைகளைத் தொடங்கத் தயாராக இருக்கும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி முதலில் உதம்பூரில் விமானம் மூலம் வருவதாகவும், அங்கிருந்து ஹெலிகாப்டரில் செனாப் பாலம் சென்று பார்வையிட்டு, அதன் பிறகு கட்ரா ரயில் நிலையம் சென்று சேவையை தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. பின்னர், கட்ரா நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்கிறார் என அரசு துறை வட்டாரங்கள் ஈடிவி பாரத்திற்கு தகவல் அளித்துள்ளன.
ஜம்மு- காஷ்மீர் ரயிலின் சிறப்புகள்
கட்ரா ரயில் நிலையத்தில் இருந்து பரமுல்லா (ஜம்மு-காஷ்மீர்) வரை நாட்டின் அதிவேக ரயிலாகப் பார்க்கப்படும் வந்தே பாரத் இயக்கப்படவுள்ளது. இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் காஷ்மீரின் கடும் குளிர் சூழ்நிலையிலும் இயங்கும் வகையில் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இது முழு ஏ.சி வசதியுடன், மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.
ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக கட்ரா-ஸ்ரீநகர் இடைப்பட்ட பகுதியில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் மட்டுமே இந்த ரயிலை இயக்க அனுமதிக்கப்படுகிறது. இரும்பு கதவுகள், பயணிகளுக்கான தகவல் வழிகாட்டி அமைப்பு, சிசிடிவி கண்காணிப்பு, மொபைல் சார்ஜிங் வசதி, எல்.இ.டி விளக்குகள், 9 கிலோ வாட் ஹீட்டிங் எலமென்ட் கொண்ட வெதுவெதுப்பு வசதியுடன் கூடிய ஏ.சி., மேம்பட்ட பிரேக் அமைப்புகள் போன்ற சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.
ஜம்மு ரயில்வே வரலாறு
1890-களில், ஜம்மு மற்றும் சியால்கோட் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பின், சியால்கோட் அவர்கள் வசம் சென்றது. இதனையடுத்து 1972-இல் ஸ்ரீநகர் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஜம்மு-க்கு ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இதையும் படிங்க |
1981-இல் ஜம்மு-உதம்பூர் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 14, 1983-இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அதற்கு அடிக்கல் நாட்டினார். நிர்வாக ரீதியாக பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஏப்ரல் 13, 2005 அன்று பிரதமர் மன்மோகன் சிங் இந்த ரயில் சேவையை பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர், ஜூலை 2014-இல், கட்ராவுக்கு நேரடி ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அதை வைஷ்ணவோ தேவி கோயில் வரை நீட்டிக்க வழிவகை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்