ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் 72 ஆவது மிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டி கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. 'நோக்கத்துடன் கூடிய அழகு' என்ற கருப்பொருளில் நடத்தப்படும் இந்த மிஸ் வேர்ல்டு போட்டி வருகிற 31 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 3 ஆவது முறையாக இந்தியாவில் நடத்தப்படும் மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டி இந்த முறை ஹைதராபாத் நகரில் நடைபெறுகிறது.
தெலங்கானா அரசின் சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள 108 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பலர் போட்டியில் வரும் இரண்டு நாட்களுக்குள் போட்டியில் பங்கேற்பார்கள் என்று தெலங்கானா அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் இந்தியாவின் சார்பில் மிஸ் வேர்ல்டு போட்டியாளராக 2023 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்வில் நாள்தோறும் உலக அழகி போட்டியாளர்கள் தெலங்கானாவின் பல்வேறு பாரம்பரிய நடன வடிவங்கள் மூலம் அவர்கள் பங்கேற்றிருக்கும் நாடுகளின் சார்பில் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும், போட்டியாளர்கள் தங்களுடைய நாட்டின் பாரம்பரிய உடைகளை அணிந்து தங்களது நாடுகளின் கொடியை பிடித்தபடி நடந்து வந்தனர். இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள நந்தினி குப்தா இந்திய பாரம்பரிய உடையில் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி நடந்து வந்தார்.

இந்த நிலையில் உலக அழகி போட்டியாளர்களுக்கு ஹைதராபாத் ராமோஜி திரைப்பட நகரத்தில் தெலுங்கானா சுற்றுலாத் துறை, ராமோஜி திரைப்பட நகர நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் உலக அழகி போட்டியாளர்களுக்கு அற்புதமான கலாச்சார மற்றும் சினிமா அனுபவம் கிடைத்தது.
மொத்தம் 108 போட்டியாளர்கள், 30 ஊழியர்களுடன், 5 பேருந்துகளில் பிற்பகல் 3.30 மணிக்கு ஹோட்டல் டிரைடெண்டிலிருந்து புறப்பட்டனர். அதே நேரத்தில், தெலங்கானா சுற்றுலா துறை சார்பில் சுமார் 100 சிறப்பு அழைப்பாளர்களும், ராமோஜி பிலிம் சிட்டியிலிருந்து 70 மூத்த அதிகாரிகளும் சுற்றுலா பிளாசாவில் இருந்து மூன்று தனித்தனி பேருந்துகளில் வருகை தந்தனர்.
பின்னர் மாலை 5 மணியளவில் புகழ்பெற்ற ராமோஜி திரைப்பட நகர சிக்னலுக்கு போட்டியாளர்கள் வந்தவுடன், அவர்களுக்கு அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் உலக அழகி போட்டியாளர்கள் பாரம்பரிய பேருந்துகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு VIP கேட், சித்தாரா, தாரா, ஏஞ்சல் நீரூற்று மற்றும் நர்த்தகி தோட்டம் போன்ற முக்கிய இடங்களை கண்டு ரசித்தார்கள். மாலை 6 மணி முதல் 6.45 மணி வரை இந்த குழு PST மாநாட்டு மண்டபத்தில் தேநீர் அருந்த கூடி அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தும், உரையாடவும் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து சிற்றுண்டிக்கு பிறகு அவர்கள் பாகுபலி திரைப்பட அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிறகு அவர்கள் மூவி மேஜிக் ஸ்டுடியோவை சுற்றிப் பார்த்தனர். பிரமாண்டமான இரவு உணவு மற்றும் துடிப்பான கலாச்சார நிகழ்ச்சிகளுடன் முகலாயத் தோட்டத்தில் இன்றைய நாள் நிறைவுப் பெற்றது.

விருந்தினர்கள் இரவு 8:30 மணிக்கு ஹோட்டல் ட்ரைடென்ட்டுக்கு புறப்பட்ட அவர்கள் இரவு 9.45 மணியளவில் திரும்பி வந்தனர். கவர்ச்சி, கலாச்சாரம் மற்றும் கொண்டாட்டத்தின் மறக்க முடியாத மாலைப் பொழுதாக அவர்களுக்கு அமைந்தது. முகலாய தோட்டத்தில் உலக அழகி போட்டியாளர்கள் இந்திய பாரம்பரிய இசையின் செழுமையான மெல்லிசைகளில் மூழ்கி அமைதியான மற்றும் கலாச்சார ரீதியாக துடிப்பான அனுபவத்தை பெற்றனர்.

அதே போல் ராமோஜி திரைப்பட நகரத்தில் உள்ள அற்புதமான முகலாயப் பூங்காவை கண்டு ரசித்தனர். மேலும் வானத்தை ஒளிர செய்த அரச கட்டிடக்கலை, நீரூற்றுகள் மற்றும் வாணவேடிக்கைகளில் மூழ்கி அனைவருக்கும் உண்மையிலேயே ஒரு மயக்கும் அனுபவமாக அமைந்தது. பாகுபலி படப்பிடிப்பில் பல்வேறு இடங்களை படம் பிடித்த பிறகு அவர்கள் ராமோஜி திரைப்பட நகரத்தின் பாதைகளுக்குள் உள்ளூர் கைவினைப்பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்களை பார்வையிட்டு தேவையானவற்றை சேகரித்துக்கொண்டனர்.

முன்னதாக உலக அழகி போட்டியாளர்கள்பாகுபலி அரங்கின் பிரமாண்டத்திற்கு மத்தியில், மிஸ் வேர்ல்ட் 2025 போட்டியாளர்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்தும், ஒருவருக்கொருவர் புகைப்படங்கள் எடுத்தும், ராமோஜி திரைப்பட நகரத்தின் சினிமா வசீகரத்தில் மூழ்கினர். மிஸ் வேர்ல்டு அழகி இறுதிப் போட்டி வரும் 31 ஆம் தேதி ஹைடெக்ஸ் கண்காட்சி மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் இந்த ஆண்டுக்கான மிஸ் வேர்ல்டு அழகி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.