டெல்லி: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
ஆளுநருக்கு வரம்புகள் இல்லாத வீட்டோ பவரா?
அதில், "அரசியல் சாசனம் பிரிவு 200 ஆளுநருக்கு அதிகாரங்கள் வழங்கிய நிலையில், அவர் தன்னிச்சையாக செயல்பட முடியுமா? ஆளுநருக்கான அதிகாரம் என்பது வரம்புகள் இல்லாத வீட்டோ பவரா?" என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், சட்டப் பேரவை முதன்முறையாக ஒரு மசோதாவை அனுப்பி வைக்கும் போது, அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் 2-வது முறையாக அதே மசோதாவை அனுப்பி வைக்கும் போது அதனை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தனர்.
ஆளுநர் அதிகாரம் தொடர்பாக பிரிவு 200 கூறுவது என்ன?
ஆளுநருக்கு அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. முதலாவது மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவது. 2-வது மசோதாவை நிறுத்தி வைப்பது, 3-வது அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது. அரசியல் சாசனம் பிரிவு 200-ன் படி ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் கொண்டவர் கிடையாது. இதில் 'வீட்டோ' பவர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆளுநருக்கு ஒரு மசோதா அனுப்பப்படுகிறது என்றால், அரசியல் சாசனப் பிரிவு 200 என்ன கூறுகிறதோ அதன் அடிப்படையில் மட்டும் தான் ஆளுநர் செயல்பட முடியும். எனவே, அந்த மசோதாவை அவரால் கிடப்பில் போடமுடியாது.
ஒரு மசோதாவை ஆளுநர் அரசுக்கு திருப்பி அனுப்பினார் என்றால், சட்டப் பேரவையில் அதனை மீண்டும் நிறைவேற்றி, அரசு ஆளுநருக்கே மீண்டும் அனுப்பும்பட்சத்தில், அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இதில் ஒரே ஒரு விதி தளர்வு என்பது, இரண்டாவது முறையாக மாநில அரசு அனுப்பும் மசோதா, முதல் முறை அனுப்பிய மசோதாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தால் மட்டும் தான் அதை குடியரசு தலைவருக்கு அனுப்புவது தொடர்பாக ஆளுநரால் பரிசீலனை செய்ய முடியும்.
“நீண்ட காலமாக ஆளுநரிடம் இந்த மசோதாக்கள் நிலுவையில் உள்ளன, மேலும் பஞ்சாப் ஆளுநரின் வழக்கில் இந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகே மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பியதில் ஆளுநர் நேர்மையாக செயல்படவில்லை என்பதால், சட்டப் பேரவையால் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நாளில் ஆளுநர் ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படுகிறது” என்று நீதிபதி பர்திவாலா கூறினார்.
10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்
ஆளுநரின் தாமதத்தைக் கருத்தில் கொண்டு, 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட போது சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன என்று கூற, பிரிவு 142 இன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
மாநில அரசால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதற்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிர்ணயம் செய்தனர். மசோதாக்களை நிறுத்தி வைக்கவோ அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவோ, ஆளுநர் முடிவு செய்தால் அதை ஒரு மாதத்திற்குள் செய்ய வேண்டும். மசோதாவை நிறுத்தி வைக்கவோ அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவோ முடிவு செய்தால், அதனை அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
அமைச்சரவையின் அறிவுரைப்படி தான் ஆளுநர் செயல்பட முடியும்
ஒரு மாநில ஆளுநர் அந்த மாநில அமைச்சரவையின் அறிவுரைப்படி தான் செயல்பட கடமைப்பட்டவர். அரசியல் சாசனத்தின் மாண்புகளை காப்பாற்றும் வகையில் தான் ஆளுநர் செயல்பட முடியும். "நாங்கள் எந்த வகையிலும் ஆளுநர் பதவியை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாண்புகளுக்கு ஏற்ப ஆளுநர் உரிய மரியாதையுடன் செயல்பட வேண்டும். சட்டப் பேரவை மூலம் வெளிப்படுத்தப்படும் மக்களின் விருப்பத்தையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையும் மதிக்க வேண்டும் என்று தான் நாங்கள் கூறுகிறோம். ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கு ஒரு நண்பராகவும், ஆலோசகராகவும் இருக்க வேண்டும். மேலும் அவரது அனைத்து செயல்களும் அவர் வகிக்கும் உயர் பதவியின் கண்ணியத்தை மனதில் கொண்டு இருக்க வேண்டும் " என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆளுநர் பதவியேற்கும் போது, அரசியலமைப்புச் சட்டத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்கவும், மாநில மக்களின் நல்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளவும், தனது பணிகளை இயன்றவரை சிறப்பாக மேற்கொள்வதாக உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார். எனவே, அவரது அனைத்து செயல்களும் அவரது சத்தியப் பிரமாணத்திற்கு உண்மையாகவே இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசியல் ஆதாயத்திற்காக மக்களின் விருப்பத்தைத் தடுக்கவும், தகர்க்கவும் ஆளுநர் தடைகளை உருவாக்கவோ அல்லது மாநில சட்டமன்றத்திற்கு நெருக்கடி கொடுக்கவோ என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகரீதியில் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக சிறப்பாகப் பயிற்சி பெற்றுள்ளனர். எனவே, மக்களின் வெளிப்படையான விருப்பத்திற்கு முரணான எந்தவொரு செயலையும் ஆளுநர் செய்யக் கூடாது. சில விஷயங்களில் நாம் முடிவெடுப்பதற்கு முன், அரசியல் சாசனத்தின்படி உயர் பதவியில் இருப்பவர்கள் அதன் மாண்புகளால் வழிநடத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
மசோதாக்களை கிடப்பில் போட்டது சட்டவிரோதம்
எனவே 10 மசோதாக்கள் மீது தமிழ்நாடு ஆளுநர் எடுத்த நடவடிக்கை சட்டவிரோதம் மட்டுமல்ல, தவறானதும் கூட. ஒரு மாநில ஆளுநர் என்பவர் அரசுக்கு உந்துதலாக இருக்க வேண்டுமே தவிர, அதன் செயல்பாடுகளுக்கு தடையை ஏற்படுத்துபவராக இருக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டது.
இதையும் படிங்க |
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. நிலுவையில் உள்ள மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.