புதுடெல்லி: மத்திய அரசு அண்மையில் அமல்படுத்தியுள்ள வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-க்கு எதிராக, திமுக எம்.பி. ஆ.ராசா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், காங்கிரஸ் எம்.பி.க்கள் இம்ரான் பிரதாப்கர்ஹி, முகமது ஜாவித் உள்பட தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 72 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று தொடங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு இந்த வழக்கில் விசாரணையை தொடங்கி உள்ளது.
அப்போது, "இந்த வழக்கில் முக்கியமான இரண்டு விஷயங்களை இருதரப்பினரிடமும் (மத்திய அரசு, மனுதாரர்கள்) இந்த நீதிமன்றம் கேட்க விரும்புகிறது," என்று தலைமை நீதிபதி கூறினார்.
அதாவது,"வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை நாங்கள் விசாரிப்பதா அல்லது ஏதேனுமொரு உயர் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புவதா? என்பது முதல் விஷயம். இரண்டாவதாக, இந்த மனுக்களை உடனே விசாரிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வதற்கான தேவை என்ன?" என்பதை சுருக்கமாக எடுத்துரைக்கும்படி கூறி தலைமை நீதிபதி சஞ்சய் கண்ணா வாதத்தை துவக்கி வைத்தார்.
நீதிபதிகளின் இந்த கேள்விகளுக்கு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பதிலளித்தார். அவர் தனது வாதத்தின்போது, "ஐந்து ஆண்டுகள் முஸ்லிமாக இருக்கும் ஒருவரே வக்ஃப் சொத்துகளை உருவாக்க முடியும் என்று இத்திருத்தச் சட்டம் சொல்கிறது. ஒருவர் முஸ்லிமா, இல்லையா என்பதையும், வக்ஃப் சொத்துகளை உருவாக்குவதற்கான தகுதிகளையும் ஒரு அரசாங்கம் எப்படி முடிவு செய்ய இயலும்?" என்று கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.
எனவே,"நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தத் திருத்தச் சட்டத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் உள்ளது மற்றும் நீதிமன்றத்தின் இந்த தலையீடு உண்மையுடன் ஒருங்கிணைந்ததாக இருக்கும்," எனவும் கபில் சிபல் வாதிட்டார்.
இதையும் படிங்க:வக்ஃப் சட்டத்திற்கு எதிராக மேலும் ஒரு மனு; 10 வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை!
அதற்கு "இந்துக்களுக்காக அரசாங்கம் சட்டம் இயற்றியுள்ளது. அதேபோன்று முஸலிம்களுக்காகவும் நாடாளுமன்றம் ஓர் சட்டத்தை இயற்றியுள்ளது,"என்று தலைமை நீதிபதி சஞ்சய் கண்ணா கூறினார்.
மேலும், "இந்த விஷயத்தில் சட்டம் இயற்றுவதை அரசியலமைப்பின் சட்டத்தின் 26-வது பிரிவு தடுக்காது. இந்தச் சட்டப்பிரிவானது உலகளாவியது மற்றும் அனைவருக்கும் பொருந்தும் வகையில் மதச்சார்பற்றது" என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
அப்போது தமது வாதத்தை தொடர்ந்த கபில் சிபல், "வக்ஃப் வாரியங்கள் மற்றும் கவுன்சில்களில் முன்பு முஸ்லிம்கள் மட்டுமே நிர்வாகிகளாக இருக்க முடியும். ஆனால் தற்போது இந்துக்களும் வாரியத்தின் நிர்வாகத்தில் பங்கேற்கலாம் எனும்படி வக்ஃப் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் அடிப்படை உரிமைகள் மீதான நேரடி தாக்குதலாகும்," என்று கபில் சிபல் வாதிட்டார்.
இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் தமது வாதத்தின்போது, "வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கைக் குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அதன்பின் தான் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது," என்று எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க:"நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும்'' - பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!
இவ்வாறாக இருதரப்பு வாதங்கள் நடைபெற்றன. இன்றைய விசாரணையின் முடிவில், பயனர் வக்ஃப் உட்பட வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்துகள் ரத்து செய்யப்படாது என்ற உத்தரவை பிறப்பிக்க, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முனைந்தது. இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
மேலும் அவர், "வக்ஃப் சட்டத்தின் கீழ் தங்களது சொத்துகள் நிர்வகிக்கப்படுவதை விரும்பாத முஸ்லிம்களின் பெரும் பகுதியினரும் உள்ளனர்," என்று வாதிட்டார்.
"அப்படியானால் இந்து அறக்கட்டளைகளின் நிர்வாகத்தில் முஸ்லிம்களை அனுமதிப்பீர்களா? என்பதை வெளிப்படையாக கூறவும்" என்று உச்ச நீதிமன்ற அமர்வு வினவியது. மேலும், "100 அல்லது 200 ஆண்டுகளுக்கு முன்னர் வக்ஃப் என அறிவிக்கப்பட்ட ஓர் அறக்கட்டளையை வக்ஃப் வாரியம் திடீரென கையகப்படுத்தி வேறுவிதமாக அறிவிக்க முடியாது," எனவும் நீதிபதிகள் கூறினர்.
இதனை தொடர்ந்து ழக்கு விசாரணை நாளை மதியம் (ஏப்ரல் 17) 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஒரு சொத்தினுடைய உரிமையாளரின் முறையான எழுத்துப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், அதன் நீண்டகால, தடையற்ற பயன்பாட்டின் அடிப்படையில் அதனை ஓர் தொண்டு நிறுவனமாக (வக்ஃப்) அங்கீகரிக்கும் நடைமுறை 'பயனர் வக்ஃப்' எனப்படுகிறது.