சோனிபட்: ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள ஓபி ஜிண்டால் பல்கலைக்கழக விடுதியில் தங்கி மாணவர் ஒருவர் கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில் அந்த மாணவர் தங்கிருக்கும் விடுதிக்கு பெரிய சைஸ் சூட்கேஸ் ஒன்றை இழுக்க முடியாமல் இழுத்து வந்துள்ளார். அப்போது, விடுதி வாயிலில் இருந்த காவலர்கள் மாணவரின் சூட்கேசை பார்த்து, "இதற்குள் என்ன இருக்கிறது" என மாணவரிடம் கேட்டுள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த அந்த மாணவர் தான் கொண்டு வந்த சூட்கேசை வேகமாக இழுக்க முயன்றார்.
அப்போது அருகில் இருந்த பொருளின் மீது சூட்கேஸ் பலமாக மோதியது. இதனால் சூட்கேஸ் உள்ளே இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. மேலும் தரையில் இருந்த சூட்கேஸ் தானாக அசைந்துள்ளது. உள்ளே இருந்து கேட்ட பெண்ணின் சத்தம் மற்றும் தானாக நெளிந்த சூட்கேசை பார்த்து விடுதியின் காவலர்கள் குழப்பம் அடைந்து திறந்து காட்டுமாறு மாணவரிடம் கூறியுள்ளனர். ஆனால் அந்த மாணவரோ தயங்கியபடி அவர்களிடம் எதையோ கூறி, சமாளிக்க முயன்றார்.
இதை ஏற்க மறுத்த விடுதி காவலர்கள் அதிரடியாக சூட்கேசை திறந்து பார்த்த போது இளம்பெண் அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சூட்கேசை சுற்றி விடுதி காவலர்கள் நிற்பதை பார்த்த அந்த இளம்பெண் வெட்கப்பட்டு நெளிந்து கொண்டு இருந்தார். இதை பார்த்த விடுதியின் காவலர்கள், ''இளம்பெண் சூட்கேஸ் உள்ளே எப்படி தன்னை பொருத்திக் கொண்டாளோ?" என்று ஆச்சரியம் அடைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் சூட்கேசை கொண்டு வந்த மாணவரின் காதலி தான் அந்த இளம்பெண் என்பது தெரிய வந்தது. இந்த விவகாரம் குறித்து ஓபி ஜிண்டால் பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனாலும், பல்கலைக்கழகம் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு விசாரணையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த சம்பவம் பல்கலைக்கழக விதிகள் மற்றும் விடுதி கொள்கைகளை தெளிவாக மீறுவதாக உள்ளதால், இரண்டு மாணவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ''யாருக்கு எதை கொடுக்கணுமோ அதை கொடுப்போம்'' - கமிஷனர் எச்சரிக்கையால் அரண்ட ரவுடிகள்!
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், ஒரு பயனர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், ''இந்த சம்பவம் கர்நாடகாவில் உள்ள மணிப்பால் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடந்ததை நினைவூட்டுவதாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்