கல்யாண்: மஹாராஷ்டிராவில் பழைய கட்டட புனரமைப்பு பணிகளின்போது ஸ்லாப் விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் கல்யாண் நகரில் உள்ள பழைய கட்டடத்தில் புனரமைக்கும் பணிகள் நேற்று (மே 20) நடந்து கொண்டிருந்தன. அப்போது கட்டடத்தின் ஒரு தளத்தின் ஸ்லாப் இடிந்து விழுந்துள்ளது. இதனால் அடுத்தடுத்த ஸ்லாப்களும் நொறுங்கி விழுந்தன. இந்த இடிபாடுகளில் 12 பேர் சிக்கிய நிலையில் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அதில் 6 பேர் மீட்கப்பட்ட நிலையில், 6 பேர் உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ருக்மணி பாய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 6 பேர் நமஸ்வி ஸ்ரீகாந்த் ஷெலர் (2), பிரமிளா கல்சரண் சாஹு (56), சுனிதா நிலஞ்சல் சாஹு (38), சுசீலா நாராயண் குஜார் (78), வெங்கட் பீமா சவான் (42), சுஜாதா மனோஜ் வாடி (38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் விநாயக் மனோஜ் பதி (4), ஷர்வில் ஸ்ரீகாந்த் ஷெலர் (4), நிகில் சந்திரசேகர் காரத் (26) மற்றும் அருணா வீர் நாராயண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கல்யாண் நகராட்சி ஆணையர் அபினவ் கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 12 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்கப்பட்ட 6 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணிகள் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் நகராட்சி, வருவாய்த் துறை, உள்ளூர் நிர்வாகம், சுகாதாரத் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட குழுவினர் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்'' என்றார்.
மஹாராஷ்டிராவில் பழைய கட்டட புனரமைப்பு பணியின்போது ஸ்லாப் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.