ஹைதராபாத்: பத்திரிகை உலகின் ஜாம்பவான் ராமோஜி ராவ் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய முழு உருவ சிலையை அவருடைய பேத்திகள் திறந்து வைத்தனர்.
பிரபல தொழிலதிபர், மூத்த பத்திரிகையாளர் மற்றும் ராமோஜி குழுமத்தின் தலைவர் என பன்முகத்தன்மை கொண்டவர் ராமோஜி ராவ். இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நகரமான ராமோஜி ஃபிலிம் சிட்டி, ஈநாடு நாளிதழ் மற்றும் ஈடிவி நெட்வொர்க் போன்றவை அனைவருக்கும் நன்கு பரிச்சயப்பட்டவை.
இவர், ஊடகம் மற்றும் சினிமா மட்டுமல்லாமல் சிட் ஃபண்ட், உணவு, விருந்தோம்பல் உள்ளிட்ட பலதுறைகளிலும் கோலோச்சினார். பத்திரிகை, இலக்கியம், கல்வித்துறைகளில் ராமோஜி ராவின் அளப்பரிய பங்களிப்பை பாராட்டி அவரை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது உள்பட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
தனது நிறுவனங்களின் முன்னேற்றம் மற்றும் தனது தொழிலாளர்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அயராது உழைத்து வந்த ராமோஜி ராவ் கடந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி தனது 87 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். திரைத்துறை மட்டுமல்லாமல் அரசியல் உலகைச் சேர்ந்த பலரும் அவருடைய உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். ராமோஜி பூத உடலானது ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இருக்கும் அவரது நினைவுத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்றுடன் ராமோஜி இவ்வுலகை விட்டு பிரிந்து சென்று ஓராண்டு நிறைவுபெறும் நிலையில், அவருடைய முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஹைதராபாத்தில் அமைந்திருக்கும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் (RFC) உள்ள நினைவுத் தோட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் இன்று (ஜூன் 8) மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ராமோஜி ராவின் உறவினர்கள், அவருடைய நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் ராமோஜி குழும ஊழியர்கள் மலர் அஞ்சலி செலுத்தி அவருடன் பயணித்த அனுபவங்கள் மற்றும் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் ராமோஜி குழுமத்தின் நிறுவன அலுவலகத்தில் அவரது பேரக்குழந்தைகள் சஹாரி, சோஹானா, பிரிஹதி மற்றும் திவிஜா ஆகியோர் ராமோஜி ராவ் முழு உருவ சிலையை திறந்து வைத்தனர்.
முன்னதாக, ராமோஜி ராவின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ரத்த தானம் செய்தனர். அதேபோல் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பணியாற்றும் ஊழியர்களும் ரத்த தானம் செய்தனர். ராமோஜி ராவ்வின் ஒவ்வொரு ஆண்டு நினைவு தினத்தின்போதும் இனிமேல் ரத்த தான முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.