ஷில்லாங்: மேகாலயாவில் தேனிலவு சென்ற நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த அவரது மனைவியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கணவனை கூலிப்படை வைத்து மனைவியே கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட ராஜா ரகுவன்ஷியின் மனைவி சோனம் தற்போது காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.
காஜிப்பூரைச் சேர்ந்த தனது சகோதரர் கோவிந்திற்கு சோனம் வீடியோ அழைப்பு மூலம் தனது இருப்பிடத்தைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் கோவிந்த் உடனடியாக ராஜாவின் மூத்த சகோதரர் விபின் ரகுவன்ஷிக்கும், ஷில்லாங் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார். அங்குள்ள ஒரு சாலையோர உணவகத்தில் இருந்த சோனம், சுமார் அதிகாலை 2 மணியளவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த சோனத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர் அளித்த வாக்குமூலத்தின் படி, இதில் தொடர்புடைய மூவரை இரவோடு இரவாக தனிப்படை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் இருவர் இந்தூரிலும், மற்றொருவர் உத்தர பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டதாக மேகாலயா காவல்துறை தலைமை இயக்குநர் (DIG) யிதாஷிஷ் நோங்ராங் தெரிவித்துள்ளார். மேலும், இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவரின் மனைவி தான் தங்களுக்கு பணம் கொடுத்து கணவரை தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்து கொடுத்ததாக கூறியுள்ளனர்.
ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு
இந்தூரை சேர்ந்த புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி - சோனம் ஆகியோர், தங்கள் தேனிலவைக் கொண்டாட கிழக்கு காசி மலைத்தொடர்களில் அமைந்திருக்கும் சிராபுஞ்சிக்கு (Cherrapunjee) சென்றுள்ளனர். மே 23ஆம் தேதி தேனிலவுக்கு சென்ற தம்பதியினர், அதன் பிறகு காணாமல் போனார்கள். இவர்கள் பாலாஜி தங்கும் விடுதியில் இருந்து வெளியே வரும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தான் கடைசியாக காவல்துறையினருக்கு கிடைத்த ஆதாரமாக இருந்தது.
மேலும், அவர்கள் வாடகைக்கு எடுத்த ஒரு ஸ்கூட்டர், தம்பதி காணாமல் போன மறுநாள் சோஹ்ராரிமில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பான வேறெந்த தகவல்களும் கிடைக்காததால் காவல்துறையினர் திணறி வந்தனர்.
இந்த நிலையில் தான், இவ்வழக்கில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. பத்து நாள்கள் கழித்து, ரியாட் அர்லியாங்கில் (Riat Arliang) உள்ள வெய்சாவ்டோங் வாகன நிறுத்துமிடத்திற்கு (Weisawdong Parking Lot) கீழே உள்ள பள்ளத்தாக்கில் இருந்து ராஜாவின் உடல் சடலமாகக் கிடைத்தது. அவரது உடலுக்கு அருகில், மனைவி சோனமின் சட்டையும், ரத்தக்கறையுடன் ஒரு கத்தியையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
ஆனால், மனைவி சோனம் எங்கு சென்றார் என்பது குறித்த எந்த தகவலும் காவல்துறை வசம் சிக்கவில்லை. உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், மவ்லக்கியத்தில் (Mawlakhiat) உள்ள ஒரு சுற்றுலா வழிகாட்டி இந்த தம்பதியை மூன்று நபர்களுடன் பார்த்ததாக காவல்துறையினரிடத்தில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க |
மேலும், “மே 22 அன்று மவ்லக்கியத்திற்கு செல்ல தனது சேவையை பயன்படுத்தி கொள்ளும்படி அந்த ஐந்து பேரிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் என் சேவைகளை வேண்டாம் என்று கூறிவிட்டனர். இந்த நிலையில் மறுநாள் மே 23 காலை 10 மணியளவில் நோங்ரியாட்டிலிருந்து மவ்லக்கியத்திற்கு செல்லும் வழியில் அவர்களை பார்த்தேன்,” என்று அந்த வழிகாட்டி தெரிவித்துள்ளார்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினரின் அடுத்தக்கட்ட விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமண தேனிலவு சென்றபோது, கணவனை கூலிப்படை வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.