புதுடெல்லி: ஜூலை 1ஆம் தேதி முதல் மெயில், விரைவு ரயில்களில் ஏசி வகுப்புகளுக்கான ரயில் பயண கட்டணத்தை கிமீ ஒன்றுக்கு 2 பைசா வீதமும், ஏசி வகுப்புகள் அல்லாத பெட்டிகளுக்கு 1 கிமீக்கு ஒரு பைசா வீதம் உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன என பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இது குறித்து செய்தி நிறுவனத்திடம் பேசிய ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர், "கடைசியாக கடந்த 2013, 2020 ஆகிய இரண்டு ஆண்டுகள் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதோடு ஒப்பிடும் போது இப்போதைய கட்டண உயர்வு என்பது மிகவும் குறைவாகும். புறநகர் ரயில்கள், மாதாந்திர பாஸ் மூலம் பயணிப்பவர்களைப் பொறுத்தவரை, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு எந்த ஒரு கட்டணமும் உயர்த்தப்படமாட்டாது.
சாதாரண இரண்டாம் வகுப்பு கட்டணத்தைப் பொறுத்தவரை முதல் 500 கி.மீ தொலைவுக்கு கட்டண உயர்வு இல்லை. 501ஆவது கி.மீ இல் இருந்து கிமீ ஒன்றுக்கு அரை பைசா மட்டும் உயர்த்தப்படும். இதற்கு முன்பு கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ரயில் பயணக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இரண்டாம் வகுப்புக்கானகட்டணம் சாதாரண, மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்பதற்கான கட்டணம் முறையே கிமீ ஒன்றுக்கு ஒரு பைசா என்றும் 2 பைசா என்றும் மாற்றப்பட்டது. அதே நேரத்தில் படுக்கை வசதி கொண்ட ரயில்கள், ஏசி வசதி கொண்ட ரயில்களில் பயணிப்பதற்கான கட்டணம் முறையே கிமீ ஒன்றுக்கு 2 பைசா, 4 பைசா என உயர்த்தப்பட்டது.
இதையும் படிங்க: ''சைபர் க்ரைம் குற்ற நபர்கள் மீது குண்டர் சட்டம்" - தமிழக அரசை வெகுவாக பாராட்டிய உச்ச நீதிமன்றம்!
2013ஆம் ஆண்டு ரயில்வே கட்டணம் அனைத்து வகுப்புகளுக்கும் உயர்த்தப்பட்டது. சாதாரண ரயில்களுக்கான இரண்டாம் வகுப்பு கட்டணம் 2 பைசா உயர்த்தப்பட்டது. எக்ஸ்பிரஸ், மெயில் ரயில்களுக்கான கட்டணம் 4 பைசா உயர்த்தப்பட்டது. அதே போல படுக்கை வசதி கொண்ட ரயில்களுக்கான கட்டணம் கி.மீக்கு 6 பைசாவாக உயர்த்தப்பட்டது.
2013ஆம் ஆண்டில் அனைத்து ஏசி இரண்டாம் வகுப்பை தவிர அனைத்து ஏசி வகுப்புகளுக்கான கட்டணமும் கிமீ ஒன்றுக்கு 10 பைசா அதிகரிக்கப்பட்டது. இரண்டாம் வகுப்பு ஏசி கட்டணம் கிமீ ஒன்றுக்கு 6 பைசா வீதம் உயர்த்தப்பட்டது,"என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்