ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் - பாரமுல்லா இடையே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கத்ரா - ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஜம்மு காஷ்மீரின் பெஹல்காமில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு முதன் முறையாக அங்கு சென்றார் பிரதமர் மோடி. அந்த மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அங்குள்ள மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.46,000 கோடி செலவிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
அதில் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்திலுள்ள செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ரயில்வே பாலத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். செனாப் பாலத்தை திறந்து வைத்த கையோடு, ஸ்ரீவைஷ்ணோ தேவி கத்ரா முதல் ஸ்ரீநகர் வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் சேவையானது அங்கு வாழும் மக்கள், சுற்றுலாப் பயணிகள், ஆன்மிக பக்தர்கள் போன்றோருக்கு விரைவான, வசதியான பயணத்திற்கு வழி வகுக்கும். இது தவிர தேசிய நெடுஞ்சாலை-701-ல் ரஃபியாபாத் முதல் குப்வாரா வரையிலான சாலை விரிவாக்கத் திட்டத்திற்கும், NH-444-ல் ரூ.1,952 கோடி மதிப்பிலான ஷோபியன் பைபாஸ் சாலை கட்டுமானத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். அது போக, பல்வேறு சாலை திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார்.
தற்போது திறக்கப்பட்டுள்ள செனாப் பாலம், இந்தியாவின் முதல் மற்றும் உலகின் மிகப் பெரிய கம்பி வழி பாலமாகும். USBRL திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் இமயமலையின் பல்வேறு குகைகள் மற்றும் கரடுமுரடான மலைகளை செதுக்கி உருவாக்கப்பட்டுள்ளது.
செனாப் பாலமானது அனைத்து விதமான காலநிலைகளையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது செனாப் நதி தொடங்கி தெற்கே ஆழமான ஆஞ்சி நதி பள்ளத்தாக்கை கடந்து உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் பாதையின் கத்ரா பகுதியை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீரிலிருந்து 80 கி.மீ தொலைவில் பனி மூடிய சிகரங்களுக்கு நடுவே ஆர்ச் வடிவில் இந்த பாலம் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. ஆற்றுப் படுகையிலிருந்து 331 மீட்டர் உயரமும், 725 மீட்டர் குறுக்கே நீண்டு, இது 96 உயர் இழுவிசை கேபிள் கம்பிகளால் வலிமையாக கட்டப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க |
இந்த பாலத்தின் நடுப் பகுதியில் தலைகீழ் Y வடிவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது அடித்தளத்திலிருந்து 193 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த பாலத்தின் மொத்த நீளம் 1315 மீட்டர். இது 36 குகைகள் மற்றும் 936 பாலங்களுக்கு நடுவே இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. முழு பாலமும் வெறும் 11 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. செனாப் பால கட்டுமான பணியில் 8,200 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது பாலத்தின் வலிமை மற்றும் நீடித்து உழைக்கு உறுதித் தன்மையை உறுதி செய்கிறது. குறிப்பாக நில நடுக்கம், சூறாவளி காற்று மற்றும் மாறி வரும் காலநிலை மாற்றங்களை தாங்கும் வகையில் கட்டப்பட்ட அஞ்சி காத் பாலம் பொறியியல் துறையின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை தெரிந்து கொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்