ஜம்மு-காஷ்மீர்: பெஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், 'பெஹல்காமில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலை அறிந்து மிகவும் வேதனையையும், அதிர்ச்சியையும் அடைந்துள்ளேன். அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் மிருகத்தனமான செயலை செய்ய இங்கு இடமில்லை. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த நிலையில், பறிபோன விலைமதிப்பற்ற உயிர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
நிவாரணம் அறிவிப்பு:
மேலும், "அன்புக்குரியவர்களின் இழப்பை எந்த பணத்தாலும் ஈடுசெய்ய முடியாது. இருப்பினும் இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்த நபர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமைடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும் நிவாரணம் வழங்கப்படும்.
உயிரிழந்தவர்களின் உடலை முறையாக அவர்களது வீடுகளுக்குக் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. காயமடைந்து மருத்துவமனையில் உள்ள நபர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு, இருள் சூழ்ந்துள்ள இந்நேரத்தில் நாங்கள் உங்களுடன் துணை நிற்போம்,” என்று உமர் அப்துல்லா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

உருவப்படம் வெளியீடு?:
பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்தியதாக சந்தேகிப்படும் நபர்களின் வரைபடங்களை பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. அப்பகுதியினர் கூறிய அடையாங்களின் அடிப்படையில் இந்தப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விமான நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு:
இந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் தங்களது வீடுகளுக்கு திரும்ப பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவைக்கேற்ப விமான சேவைகளை அதிகரிக்கவும், ஸ்ரீநகரிலிருந்து இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு தடையற்ற சேவையை உறுதி செய்யவும், பரபரப்பான சூழலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றுவதற்கும் விரைவான நடவடிக்கை எடுக்கவும் விமான நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மோடி தலைமையில் ஆலோசனை:
காஷ்மீர் முழுவதும் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் முழுவதும் கடைகள் அனைத்திற்கும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் யூனியன் பிரதேசம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, 2 நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்த பிரதமர் மோடி, தமது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இன்று அதிகாலை நாடு திரும்பினார்.
பின்னர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், பெஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மறுஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில், இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவைக் குழு (CCS) கூட்டம் நடைபெறவுள்ளது.
அமித் ஷா நேரில் அஞ்சலி:
இதனிடையே, பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஸ்ரீநகரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்த பைசரன் புல்வெளி பகுதிக்கு அவர் சென்றார். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் டிஜிபி மற்றும் ராணுவத் தளபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர், பள்ளத்தாக்கின் நிலைமையை ஆய்வு செய்த அவர், "கனத்த இதயத்துடன், பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். இந்த தாக்குதலுக்கெல்லாம் இந்தியா அடிப்பணியாது; கொடூரமான செயலில் ஈடுபட்ட நபர்கள் தப்பிக்க முடியாது," என்று எக்ஸ் தளத்தில் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உலகத்தையே உலுக்கிய பெஹல்காம் தாக்குதல்: தமிழர்கள் நிலை என்ன? |
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பகுதியிலிருந்த சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. பலர் காயம் அடைந்துள்ளனர், இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டினர் மற்றும் இரண்டு உள்ளூர்வாசிகளும் உயிரிழந்துள்ளனர்.
பயங்கரவாதிகள் "ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்கியதாக" சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.