வயநாடு: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முண்டக்கையில் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட பின்னர், மத்திய இணை அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் கடந்த மாதம் 30ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடைபெற்று வரும் மீட்புப்பணிகளை நேற்று மலையாள நடிகரும், ராணுவத்தில் கவுரவ பதவியில் உள்ள மோகன்லால் சென்று பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து, இன்று முண்டக்கை, சூரல் மலையில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆய்வு செய்தார். அப்போது, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பேசிய அவர், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பதற்கான சட்டப்பூர்வ தன்மைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், பேரிடரால் பாதித்த இடங்களை நேரில் பார்த்து புரிந்து கொண்டவற்றை மத்திய அரசின் முன் வைப்பதாக தெரிவித்தவர், கேரளாவுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய உதவிகள் குறித்து, நிலச்சரிவு பாதிப்பை மதிப்பீடு செய்து கோரிக்கை வைக்க வேண்டும் என்றார்.
இப்போது இருக்கும் சூழ்நிலையில், உயிருடன் மீட்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கும், அவர்களின் மனநிலையை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மீட்புப் பணிகளில் கூடுதல் உதவி தேவைப்பட்டால், கேரள அரசு மத்திய அரசுக்கு முறைப்படி கோரிக்கை வைக்க வேண்டும்” என்று சுரேஷ் கோபி கூறினார்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 215 பேரின் சடலங்கள், 143 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 98 ஆண்கள், 87 பெண்கள் மற்றும் 30 குழந்தைகள் அடங்குவர் என தகவல் வெளியாகியுள்ளது.