உதம்பூர் (ஜம்மு & காஷ்மீர்): "ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இனி இந்தியா பயங்கரவாத தாக்குதலை பொறுத்து கொள்ளாது. பாகிஸ்தான் இனி ஒரு முறை தாக்குதல் நடத்தினாலும், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உதம்பூர் வடக்கு ராணுவ கட்டளைப் படை தளத்தில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் இன்று (ஜூன் 21) நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத் தளபதி உபேந்திர திவேதி பங்கேற்றனர்.
முதலில் யோகாவின் முக்கியத்துவம் குறித்து மேடையில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், பின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆபரேஷன் சிந்தூர்’ பாகிஸ்தானுக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கும். இந்தியாவை அழிக்க “ஆயிரம் வெட்டுகள்” (இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் தாக்குதல் நடத்துதல்) என்னும் கொள்கையை பாகிஸ்தான் பின்பற்றுகிறது. ஆனால், அந்தக் கொள்கையால் இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாது என்பதை ஆபரேஷன் சிந்தூர் அந்நாட்டுக்கு உணர்த்தி இருக்கும்.
இந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடிவடையவில்லை. இனி எந்தவொரு பயங்கரவாத தாக்குதலையும் இந்தியா பொறுத்துக் கொள்ளாது. பாகிஸ்தான் அடுத்து ஒரு தாக்குதலை நடத்தினால், இந்தியா அதன் முழுமையான சக்தியை பயன்படுத்தி தொடர் எதிர் தாக்குதலை நடத்தும். ஆபரேஷன் சிந்தூர் என்பது 2016 சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் 2019 வான்வழித் தாக்குதல் (எல்லையைத் தாண்டி) ஆகியவற்றின் தொடர் நடவடிக்கை தான்.
இனி இந்திய மண்ணில் பாகிஸ்தானால் எந்தவொரு பயங்கரவாத தாக்குதல் நடந்தாலும், பாகிஸ்தானுக்கு பேரழிவு ஏற்படும். பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த வகையான நடவடிக்கையையும் எடுக்க இந்தியா தயாராக உள்ளது என ராஜ்நாத் சிங் கூறினார்.
இதையும் படிங்க: எஸ்.பி. அலுவலகத்தில் பார் கவுன்சில் தலைவர் - போலீசார் வாக்குவாதம்! பரபரப்புக்கு காரணம் இதுவா? |
கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் பஹல்காம் பள்ளதாக்கில் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 26 இந்திய அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா மே 6 மற்றும் 7ஆம் தேதிகளில் இரவு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் அங்குள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்