இந்தூர் (மத்திய பிரதேசம்): ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு தொடர்பாக பேசிய அவரது தாய், தனது மருமகளிடம், ‘நீ இதை செய்தாயா... அப்படியென்றால் என் மகனை கொலை செய்ததற்கான காரணம் என்ன?’ என்று கேட்பேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய ராஜா ரகுவன்ஷியின் தேனிலவு மரணத்தில் இன்னும் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ளது. ராஜாவின் மனைவி சோனத்திடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ராஜா ரகுவன்ஷியின் அம்மா தனது மருமகள்தான் தனது மகனை கொலை செய்தாரா எனவும், அப்படி கொலை செய்திருந்தால் கொலைக்கான காரணத்தை கேட்க வேண்டுமெனவும் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

ரகுவன்ஷியின் குடும்பம் இந்தூரில் டிராவல் பிசினஸ் செய்துவருகிறது. இந்த குடும்பத்தின் இரண்டாவது மகனான ராஜாவிற்கும் சோனம் என்ற பெண்ணுக்கும் மே 11ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் தேனிலவுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கின்றனர். சோனத்தின் அறிவுரைப்படி, மே 20ஆம் தேதி மேகாலயாவிற்குச் சென்ற புதுமணத் தம்பதி மே 23ஆம் தேதி காணாமல்போனது. சுமார் 10 நாட்களாக இருவரும் எங்கு போனார்கள் என தேடப்பட்டுவந்த நிலையில் ஜூன் 2ஆம் தேதி சிரபுஞ்சியின் சோஹ்ரா நீர்வீழ்ச்சிக்கு அருகேயுள்ள பள்ளத்தாக்கு பகுதியில் ராஜாவின் சடலம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் ராஜாவுடன் சென்ற அவருடைய மனைவி சோனத்தை தேடிவந்த நிலையில், சோனம் காவல்துறையிடம் சரணடைந்தார். உடல்நலக்குறைவுடன் இருந்த சோனத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சையளித்து, அவரிடம் விசாரணை நடத்தியதில், கூலிப்படையை வைத்து ராஜாவை கொலைசெய்தது தெரியவந்தது. அவர் அளித்த தவலின்பேரில் ஆகாஷ் ராஜ்புட்(19), விஷால் சிங் சௌஹான்(22) மற்றும் ராஜ் சிங் குஷ்வாஹா(21) ஆகியோர் உடனடியாக கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில் சோனம் பணம் கொடுத்து ராஜாவை கொலைசெய்ய சொன்னதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தேனிலவு செல்லும் முன்பு நடந்தது என்ன?
தனது மகனின் இறுதிச்சடங்குகள் முடிந்த நிலையில் ராஜா ரகுவன்ஷியின் தாய் உமா தேனிலவுக்கு செல்லும் முன்பு நடந்தவற்றை செய்தியாளர்களிடம் விவரித்துள்ளார். “தேனிலவுக்கு செல்லும்போது அவன் ஒரு செயினை எடுத்துப்போட்டான். அதுகுறித்து நான் கேட்டபோது சோனம்தான் போடச்சொன்னதாக கூறினான். அப்போதே எனக்கு ஏதோ ஆபத்து இருப்பதாக தோன்றியது. அதன்பின்னால் ஏதேனும் ஒரு திட்டம் இருந்திருக்கலாம். அவளுடைய நடத்தை நன்றாகத்தான் இருந்தது. அவள் இப்படி செய்தால் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
சோனத்தின் அறிவுறுத்தலின்பேரில்தான் எனது மகன் மேகாலயாவிற்கு போனான். அவனுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் தேனிலவுக்கு செல்வதில் உடன்பாடில்லை. மேகாலயாவிற்கு சோனம் டிக்கெட் பதிவுசெய்திருப்பதாக என் மகன் என்னிடம் சொன்னான். டிக்கெட் பதிவுசெய்துவிட்டால் நீ உன் மனைவியுடன் போகவேண்டும் என்று சொன்னேன். அதேசமயம் சோனம் திரும்பிவர டிக்கெட் பதிவு செய்யவில்லை என்றும், 6 அல்லது 7 நாட்களில் இந்தூருக்கு திரும்பிவிடுவோம் என்றும் கூறினான்.
எங்கு, ஏன், என்ன நிலையில் சோனம் என் மகனை விட்டுவிட்டுச் சென்றாள் என அவளிடம் நான் கேட்கவேண்டும். இந்த குற்றத்தை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும். சோனம் இதை செய்திருந்தால் அவளும் தண்டிக்கப்பட வேண்டும். உண்மையிலேயே அவள் ராஜாவை கொலை செய்திருந்தால் மரண தண்டனை போன்ற மிக கடுமையான தண்டனை அவளுக்கு வழங்கப்பட வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகும்கூட சோனம் தனது மகனிடம் நிறைய நேரம் செலவிடவில்லை எனவும், வெளியே செல்லாமல் தவிர்த்ததாகவும் தெரிவித்தார். இதுகுறித்து சோனத்திடம் கேட்டபோதுகூட அலுவலகத்தில் நிறைய வேலை இருப்பதாக கூறியதாகவும், தன்னால் போன் செய்ய முடியாவிட்டால், உங்களுடைய மகன்கூட போன் செய்யலாம் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

சோனத்தின் அம்மாவும் தனது குடும்பம் மிகவும் கட்டுப்பாடானது எனவும், எனவே திருமணத்திற்கு முன்பு ஆண், பெண் இருவரும் சந்திப்பதை அவருடைய அப்பா விரும்பமாட்டார் எனவும் தெரிவித்ததாக உமா ரகுவன்ஷி தெரிவித்திருக்கிறார். மேலும் திருமணத்திற்கு பிறகு சோனம் தங்களிடம் நன்றாக நடந்துகொண்டதால் யாருக்கும் அவர்மீது சந்தேகம் வரவில்லை எனவும் கூறியுள்ளார்.
எனது மகள் அப்பாவி - சோனத்தின் அப்பா
இதனிடையே ராஜா ரகுவன்ஷியின் இறுதிச்சடங்கிற்காக கார்ச்சா பகுதியில் இருக்கும் கோவிந்த் நகருக்கு செல்ல அவரது குடும்பத்தினர் 4 வாகனங்களை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் ஒரு வாகனத்தை குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் குஷ்வாஹா ஓட்டிவந்ததாகவும் ரகுவன்ஷியின் உறவினர்களில் ஒருவர் தெரிவித்தார். இதனால் சோனத்திற்கு குஷ்வாஹாவிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது.
இதையும் படிங்க |
இந்நிலையில் சோனமே தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் சொல்லப்பட்டாலும், அவருடைய தந்தை தேவி சிங் ரகுவன்ஷி தனது மகள் ஒரு அப்பாவி என்றும், குஷ்வாஹாவுடன் தனது மகளை தவறாக இணைத்து பேசுவதாகவும் கூறியதுடன், மேகாலயா காவல்துறைக்கு சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பப்போவதாகவும் மிரட்டியுள்ளார். மேலும் இந்த வழக்கை சிபிஐ வசம் மாற்றவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
நாட்டையே உலுக்கிய இந்த கொடூர மரண வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த மேகாலயா போலீசாருக்கு அம்மாநில முதல் கோன்ராத் கே சங்க்மா வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். சோனம் மற்றும் கைது செய்யப்பட்ட மற்ற மூவரிடையே தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சோனத்திற்கும் ராஜாவிற்கும் இடையே என்ன பிரச்சினை இருந்தது? கொலைக்கான பின்னணி காரணம் என்ன? எங்கு வைத்து கொலை நடந்தது? என்பது போன்ற கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.