புதுடெல்லி: கனவுகளைப் பின் தொடர்வதற்கு வயது தடை இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் 81 வயதான டெல்லியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் ராணி என அழைக்கப்படும் பெண். இவர் எம்பிராய்டரி மூலம் ஸ்வெட்டர்கள், நூலால் பின்னப்பட்ட கலை படைப்புகளை உருவாக்குகிறார்.
தேவை அதிகரிப்பு: ஷீலா பஜாஜ் (81), மேற்கு டெல்லியில் உள்ள ஜானக்புரியில் வசிக்கிறார். கடந்த பல ஆண்டுகளாக ஓய்வு நேத்தில் வீட்டில் உள்ளவர்களுக்காக எம்ப்ராய்டரி மூலம் ஸ்வெட்டர்களை பின்னி வந்தார். தமது விருப்பமான பணியை கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது வணிகமாக மாற்றி விட்டார். எம்ப்ராய்டரி செய்யப்பட்ட வீட்டு அலங்காரப் பொருட்கள், ஆடைகள், வடிவமைக்கப்பட்ட பைகள், பொம்மைகள், குளிர்தாங்கும் ஆடைகள் போன்ற அவர் உருவாக்கும் பொருட்களுக்கு நாடு முழுவதும் பெரும் தேவை எழுந்தது.
சுதந்திரத்தின் போது நாடு பிரிவினையை சந்தித்த போது ஷீலாவின் குடும்பம் பீகாரில் வசித்தது. அங்கு அவர் 11 ஆம் வகுப்பு வரை படித்தார். திருமணத்துக்குப் பின்னர், அவர் டெல்லிக்கு வந்தார். மிகவும் இளம் வயதாக இருக்கும் போதே அவருக்கு அவரது தாய், எம்ப்ராய்டரி மூலம் ஸ்வெட்டர்கள் பின்னுதல் உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுத்திருக்கிறார்.
ஒரு நாள் அவர் தமது உறவினர் பெண் ஒருவர் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவர் எம்ப்ராய்டரியால் எப்படி கலைப்பொருட்களை உருவாக்குவது என்று கற்றுக் கொண்டார். அதன் பின்னர் சிறிய அளவிலான பொருட்களை உருவாக்கத் தொடங்கினார்.

கொரோனாவின் போது கிடைத்த வாய்ப்பு: ஷீலா அவரது குடும்பத்தில் மூத்த மருமகளாக இருந்தார். அவரது உறவினர் பெண்களுக்கு திருமணம் நடைபெறும் போதெல்லாம் டிசைன் செய்யப்பட்ட ஸ்வெட்டர்கள், எம்ப்ராய்டரி துணியால் செய்யப்பட்ட பொருட்களை பரிசாகக் கொடுத்து வந்தார். ஆனால், தமது திறமையைக் கொண்டு பணம் சம்பாதிக்க முடியும் என்ற யோசனை அவருக்கு இருந்ததில்லை.
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தின் போது ஷீலாவின் வாழ்க்கை வித்தியாசமான கோணத்தை நோக்கிச் சென்றது. "அந்த காலகட்டத்தில் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. வீட்டில் வெறுமனே உட்கார்ந்து இருப்பது எனக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. அப்போது என்னுடைய பேத்தி யுக்தியிடம், சில பழைய துணிகள், ஸ்வெட்டர்கள் இருந்தால் கொடுக்கும்படி கேட்டேன். அப்போது நான் கையால் சில பின்னல் வேலைகளை செய்தேன். என்னுடைய வேலைப்பாடை பார்த்து அதனை என் பேத்தி மிகவும் ஆச்சரியப்பட்டார். சமூக வலைதளங்கள் மூலம் அவற்றை என் பேத்தி விற்க ஆரம்பித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆன்லைன் வாயிலாக என்னுடைய பொருட்களை பேத்திதான் விற்பனை செய்து வருகிறார்," என்றார்.
ஸ்டார்ட் அப் ராணி: இந்த முதிய வயதில், திறமைகள் கொஞ்சம், கொஞ்சமாக மறந்து போகும் என்று பொதுவாக பலர் நினைப்பார்கள். ஆனால், ஷீலா வீட்டில் இருந்தபடியே தமது திறமைகளை வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். "என்னுடைய விரைவான பின்னல் திறன் ஒரு போதும் குறைந்ததில்லை. என்னுடைய கண் பார்வையும் இன்னும் தெளிவாக இருக்கிறது," என்கிறார் ஷீலா. அவர் இப்போது வாரம் தோறும் 20 முதல் 25 ஆர்டர்களைப் பெறுகிறார். மாதம் தோறும் ரூ.30,000 சம்பாதிக்கிறார். இதன் மூலம் அவரது ஆண்டு வருவாய் லட்சங்களில் இருக்கிறது. ஷீலா நாடு முழவதும் ஸ்டார்ட் அப் ராணி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'அயன்' திரைப்படப் பாணியில் போதைப் பொருள் கடத்தி வந்த பெண்! விமான நிலையத்தில் சிக்கியது எப்படி?
"நான் செய்த பொருட்களை வாடிக்கையாளர்கள் விரும்பும் போது நான் மிகவும் மகிழ்கின்றேன். என்னுடைய பொருட்களைப் பற்றி வாடிக்கையாளர்கள் பெருமையாகக் குறிப்பிடும் போதும், நான் தயாரிக்கும் பொருட்களை ஒவ்வொருவரும் விரும்புவதும் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் என்னவிதமான பொருட்களை வாங்கினாலும், அவர்களுக்கு என்னுடைய அன்பையும் வாழ்த்தையும் சேர்த்தே அனுப்ப முயற்சிக்கிறேன். அவர்களின் ஊக்குவிப்பு என்னை மேலும் வலுவாக்குகிறது,"என்றார் ஷீலா.
பேத்தியின் அன்பு: ஷீலா தம் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார். இரண்டு மகள், ஒரு மகனின் தாய் அவர். அவது மகன் ஒரு சாலை விபத்தில் 2012ஆம் ஆண்டு இறந்து விட்டார். அவரது மருமகளும் ஒரு சாலை விபத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு இறந்து விட்டார். 2016ஆம் ஆண்டு ஷீலாவின் கணவர் இறந்து விட்டார். அவரது பேத்தி யுக்தி டெல்லியில் இருக்கிறார். அவரது பேரன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். "யுக்தி என்னை ஒருபோதும் பாட்டி என்று கூப்பிடமாட்டார். என்னை அவர் அம்மா என்றுதான் குறிப்பிட்டு அழைப்பார்."என்றார் ஷீலா.
"எனது பாட்டிக்கு மிகவும் தனித்தன்மைவாய்ந்த திறன் உள்ளது. அவர் இந்த உலகத்தின் முன்பு அதனை வெளிப்படுத்தி உள்ளார். அவரது பொருட்களுக்கு சமூக வலைதளங்களில் வரும் பின்னூட்டங்கள் அவரை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கின்றன. கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். வழக்கமான வீட்டு வேலைகளை செய்து வந்தார். ஆனால், கொரோனா முழு அடைப்பின் காரணமாக அவர் வெளியே செல்வது குறைந்தது. நானும் வீட்டில் இருந்தே அலுவலகப் பணிகளை கவனிக்கத் தொடங்கினேன். அப்போது, அவரது திறமைகளுக்கான அங்கீகாரத்தை அவர் பெற வேண்டும் என்று நான் உணர்ந்தேன்,"என்றார் யுக்தி.
எம்ப்ராய்ட்ரி மூலம் உருவாக்கப்பட்ட ஒரு பொருளுக்கு முதன் முதலாக ஆர்டர் பெற்ற போது என் பாட்டி மிகவும் மகிழ்ந்தார். நான்கு மாதங்களுக்கு முன்பு யுக்திக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால், அவர் தமது பாட்டி வீட்டுக்கு அருகிலேயே குடியிருப்பதால், ஒவ்வொரு நாளும் பாட்டியை சந்திக்க சென்று விடுகிறார்.
வாழ்க்கையில் தளர்வு கூடாது: ஸ்டார்ட் அப் ராணியான ஷீலாவால் ஈர்க்கப்பட்ட பல முதிய பெண்கள், இந்த திறனைக் கற்றுக் கொண்டு சுயசார்புடன் திகழ்வதற்கு முன் வந்துள்ளனர்."முதிய வயது என்பதற்காக, யார் ஒருவரும் சோம்பலாக இருக்க வேண்டியதல்ல. ஒவ்வொருவருக்கும் பல்வேறு வித்தியாசமான திறன்கள் இருக்கின்றன. அந்த திறன்களை அடையாளம் காண்பதுதான் முக்கியம். நடந்து செல்ல முடிந்தவர்கள் நடப்பதற்கான வாய்ப்புள்ள பணிகளில் ஈடுபடலாம். நடக்க முடியாதவர்கள், வீட்டில் இருந்தபடியே என்னைப் போல தங்களது திறமைகளை உபயோகித்துக் கொள்ளலாம். ஒருவருக்கு ஊக்கமும், வலுவும், தீர்மானமும்தான் தேவை. நான் எப்போதுமே என் பேத்திக்கு வாழ்க்கையில் தளர்ந்து விடக்கூடாது என்றுதான் சொல்கின்றேன்,"என்றார் ஷீலா.
அனைத்து வயதினருக்குமானதாக ஷீலாவின் பின்னலாடை பொருட்கள் திகழ்கின்றன. குழந்தைகள் என்றால், அவர்களுக்கு தேவைப்படும் உள்ளாடைகள், ஸ்வெட்டர்கள், காலுறைகள், கையுறைகள், பொம்மைகள் ஆகியவை உள்ளன. அதே போல இளம் வயதினருக்கான பர்ஸ், காதணிகள், தொப்பிகள், ஸ்வெட்டர்கள் ஆகியவையும் கிடைக்கின்றன. பெட்ஷீட்கள், வீட்டை அழகுபடுத்துவதற்கான சுவர்களின் மாட்டக் கூடிய பொருட்கள். அனைத்து பொருட்களையும் ஆன்லைன் வழியே ஷீலா விற்பனை செய்கிறார்.
