டெல்லி: அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து தப்பிக்க கீழே குதித்த இரண்டு குழந்தைகள் மற்றும் தந்தை மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெல்லியின் துவாரகா பகுதியில் வசித்து வந்தவர் யஷ் யாதவ். 35 வயதான இருவருக்கு 10 வயது மதிக்கத்தக்க ஒரு மகனும் மகளும் இருந்தனர். இவர் தனது குடும்பத்துடன் அங்குள்ள ஷக்பாத் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் யஷ் வசித்து வந்த ஏழாவது தளத்தில் திடீரென பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து டெல்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பற்றியெரிந்த தீயை அணைக்க உடனடியாக சம்பவ இடத்திற்கு எட்டு தீயணைப்பு வாகனங்கள் வந்து சேர்ந்தன.
இதற்கிடையே ஏழாவது மாடியின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது மதிக்கத்தக்க சிறுவனும், சிறுமியும் பற்றியெரிந்த தீயைப் பார்த்து பயந்து அதிலிருந்து தப்பிக்க நினைத்து மேலிருந்து கீழே குதித்திருக்கின்றனர். தனது குழந்தைகள் குதிப்பதைப் பார்த்து பதறிப் போன தந்தை யஷ்ஷும் மேலிருந்து கீழே குதித்திருக்கிறார். மேலிருந்து கீழே குதித்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள மக்கள் அவர்களை மீட்டு இந்திரா காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.
சிறுவன் மற்றும் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தைகளின் தந்தை யஷ்ஷை பரிசோதித்து பார்த்த போது அவரும் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்குச் சென்ற போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
துவாரகாவில் நடந்த இத்துயர சம்பவம் குறித்து கூடுதல் கோட்ட தீயணைப்பு அதிகாரி கூறுகையில், “அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் இரண்டு பேர் குழந்தைகள். அவர்களை மேற்சிகிச்சைக்காக ஆகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு போகும் முன்பே அந்த 5 பேரையும் தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்திலிருந்து பொதுமக்கள் வெளியே கொண்டுவந்துவிட்டனர்” என்று கூறினார்.
தீ விபத்திலிருந்து தப்பிக்க நினைத்து கீழே குதித்து குழந்தைகளும், தந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.