ஹுப்பள்ளி: கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரக்ஷித் கிராந்தி என்பவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தலைமறைவாக இருந்த அவரை கர்நாடக மாநில காவல் துறையினர் நேற்று மாலை சுற்றிவளைத்து பிடித்தனர்.
பின்னர் அவரிடம் தொடர்ந்து இரண்டு மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடீரென காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரக்ஷித்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், அவர் உடலில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தை பாலியல் வன்கொடுமை
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 5 வயது பெண் குழந்தையுடன் நேற்று (ஏப்.13) காலை வழக்கம்போல் ஹூப்பள்ளிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டிற்குள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அவரின் 5 வயது மகள் வீட்டு வளாகத்துக்குள் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
வீட்டு வேலைகளை முடித்து வெளியே வந்த தாய் மகள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். எங்குத் தேடியும் மகள் கிடைக்காத நிலையில் அவர் வேலை செய்துவந்த வீட்டின் எதிரே இருந்த கட்டிடம் ஒன்றின் கழிப்பறையில் சிறுமி சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதைப் பார்த்துப் பதறிப் போன தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் அந்த சிறுமியை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவத்திற்கு நியாயம் வேண்டும் எனக் கூறி காவல் நிலைய வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டடனர். இதையடுத்து உயிரிழந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முதற்கட்டமாக அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தனர். அதில் சிறுமியை ஒருவர் கடத்தி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தது. அந்த நபர் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ரக்ஷித் கிராந்தி (வயது 35) என்பது தெரியவந்தது. மேலும் இவர் பல ஆண்டுகளாகக் கர்நாடகாவில் கிடைத்த வேலையைச் செய்து வருபவர் என்றும், கடந்து 3 மாதங்களாக இந்த பகுதியில் உள்ள தாரிஹாலா சுரங்கப்பாதைக்கு அருகே இருக்கும் கட்டடம் ஒன்றில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று மாலை ரக்ஷித் கிராந்தி போலீசாரிடம் சிக்கியுள்ளார். அப்போது அவர் போலீசார் மீது பெரிய கற்களை வீசத் தொடங்கியதாகவும் இதில் யஷ்வந்த், வீரேஷ் ஆகிய காவலர்கள் காயமடைந்த நிலையில் அங்கிருந்த பெண் காவல் அதிகாரி அன்னபூர்ணா எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், ரக்ஷித் கிராந்தி ஓடாமல் நிற்க கூறியும் துப்பாக்கியால் மூன்றுமுறை வானத்தை நோக்கிச் சுட்டதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: "நீதிமன்றமே சொல்லிடுச்சு ரூ.1.32 கோடியை ரிலீஸ் பண்ணுங்க" - வங்கி மோசடி பணத்தில் கிளப்புகளில் ஆட்டம் போட்ட மூவர் கைது! |
ஆனால், அதை ரக்ஷித் கிராந்தி பொருட்படுத்தாமல் தப்பி ஓடியதால், பெண் காவலர் ரக்ஷித் கிராந்தியின் கால் மற்றும் முதுகு பகுதியில் சுட்டுள்ளார். அதில் கீழே விழுந்த ரக்ஷித் கிராந்தியை போலீசார் மீட்டு அருகில் இருந்த கேஎம்சி மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக காவல் ஆணையர் என்.சஷி குமார் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.