புதுடெல்லி: பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் தேவையற்ற கருத்துகள் கூறுவதை தவிர்த்திருக்க வேண்டும் என தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி இதே போல இன்னொரு வழக்கு ஒன்றில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் ஆடையை கிழிப்பது உள்ளிட்ட செயல்கள் பாலியல் வன்கொடுமை செய்தது ஆகாது என்று கூறியிருந்தார். இந்த கருத்து நாடுமுழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அதே அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வேறு ஒரு நீதிபதி, பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி வெளியிட்ட உத்தரவில், ''பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் செயலானது, தமக்கு தாமே தீங்கு ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் உள்ளது,"என்று கூறியிருந்தார்.
அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள்,"ஒவ்வொரு வழக்கிலும் உள்ள அம்சங்களை சார்ந்து நீதிபதி ஜாமீன் உத்தரவை வழங்க வேண்டும். புகார்தாரருக்கு எதிராக தேவையற்ற கருத்துகள் கூறுவதை தவிர்க்க வேண்டும். அலகபாத் உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது. இதே உயர் நீதிமன்றத்தில் இன்னொரு நீதிபதி இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லி இருக்கிறார். ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், வேண்டும் என்ற பிரச்னையை வரவழைத்துக் கொண்டார் என்பது குறித்து விவாதம் நடந்திருக்கிறது. புகார்தாரருக்கு எதிராக இது போன்ற விஷயங்களைச் சொல்லும் போது ஒருவர் கவனமாக இருக்க வேண்டும்,"என்று கூறினர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு அடுத்த அடி... பழங்குடியினருக்கான கல்வி மேம்பாட்டு நிதி கைவிரிப்பு!
பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் கொடுத்த வழக்கில் கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள பார் ஒன்றில் அந்தப் பெண் குற்றம் சாட்டப்பட்ட நபரை சந்தித்ததாக விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கின் அனைத்து அம்சங்கள் குறித்தும் நான்கு வாரங்கள் கழித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த விஷயத்தில் அகலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த சர்ச்சைக்குரிய உத்தரவை மார்ச் 26ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. முழுவதும் உணர்வற்ற நிலையில் நீதிபதி தீர்ப்பளித்திருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
"தீர்ப்பை எழுதிய நீதிபதி, உணவற்ற நிலையில் தீர்ப்பு எழுதியதையே இது வெளிப்படுத்துகிறது. இது எங்களுக்கு வலியை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கு நான்கு மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாம் பொதுவாக தடை விதிப்பதற்கு தயங்குவோம். ஆனால், அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பத்தி 21, 24 ஆகியவை சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக தெரியவில்லை. மனித நேயமற்ற அணுகுமுறையே காணப்படுகிறது. இந்த பத்திகளில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு நாங்கள் தடை விதிக்கின்றோம்,"என்று கூறினர்.
அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்ட வழக்கில் கடந்த மார்ச் 17ஆம் தேதி வெளியிட்ட உத்தரவின் போது நீதிபதிகள் கூறிய கருத்துகள் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பு குறித்து வீ த உமன் இந்தியா என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்டது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்