பெங்களூரு: அரசு அதிகாரிகள் போல போலியான 18 நீதிமன்ற உத்தரவுகளை உருவாக்கி தனியார் வங்கியில் ரூ.1.32 கோடி முறைகேடு செய்த டெல்லியை சேர்ந்த இருவர், ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் என மூவரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் ஹலசுரு பகுதியில் உள்ள தனியார் வங்கியின் கிளையை குறி வைத்து மோசடியில் ஈடுபட்ட மூவரை, வங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில் பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
மோசடி சதி: டெல்லியை சேர்ந்த அபிமன்யு குமார் பாண்டே, நீரஜ் சிங், ராஜஸ்தானை சேர்ந்த சாகர் லக்குர் ஆகியோர் போலியான நீதிமன்ற உத்தரவுகளை தயாரித்து போலியான அரசு மின்னஞ்சல் முகவரி வழியாக வங்கிக்கு அனுப்பி உள்ளனர். கர்நாடகா மாநில கே -ஸ்வான் என்ற கட்டமைப்பின் மூலம் அரசு அதிகாரிகள் போல அரசு மின்னஞ்சல் முகவரியை பெறுவதற்காக மூவரும் விண்ணப்பம் செய்தனர். மூவரில் ஒருவர் வங்கி கணக்கு ஒன்றை தொடங்கினார். மீத இருவரும் போலியான கையெழுத்துகள், முத்திரைகள் ஆகியவற்றையும், போலியான ஆவணங்களையும் உருவாக்கினர்.
இந்த மோசடியின் முதன்மையானவராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாகர் லக்குர், இதற்கு முன்பு ராஜஸ்தானில் ஒரு தனியார் வங்கியில் விற்பனைப் பிரிவில் பிரதிநிதியாகப் பணியாற்றி உள்ளார். வங்கியால் முடக்கி வைக்கப்பட்ட ஒரு கணக்கை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அரசு தரப்பில் இருந்து மின்னஞ்சல் அனுப்பி எவ்வாறு அதனை செயலாக்கம் செய்வது என்ற பின்னணி தெரிந்தவர் ஆவார். இவர் ஏற்கனவே ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட மோசடியில் அகமதாபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் ஆவார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர், பெங்களூருவில் ஒரு தனியார் வங்கி கணக்கில் ரூ.1.32 கோடி முடக்கி வைக்கப்பட்டிருப்பதை அறிந்தார். இதனை மோசடியாக கைப்பற்றுவதற்காக தன்னோடு இரண்டு கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு பெங்களூரு வந்துள்ளார்.
உண்மை என்று நம்பிய வங்கி அதிகாரிகள்: வங்கி கணக்கு முடக்கப்பட்ட தனியார் வங்கிக்கு கடந்த பிப்வரி மாதம் முதல் இப்போது வரை இந்த மோசடி கும்பல் 18 போலியான நீதிமன்ற உத்தரவுகளை உருவாக்கி அதனை வங்கிக்கு அனுப்பியது. அந்த 18 போலி உத்தரவுகளிலும் முடக்கி வைக்கப்பட்ட கணக்கை செயலாக்கம் செய்யும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. அதே போல அரசு அதிகாரிகள் போல வங்கிக்கு தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு பேசுவது போலவும் பேசி உள்னர்.
இதையும் படிங்க: ரெய்டுக்கு பயந்து கொள்கையை அடமானம் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் தாக்கு
அந்த மூவரும் பேசிய தொலைபேசி எண்கள் போலியான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்களுடன் ஒரே மாதிரியாக இருந்ததால் வங்கி அதிகாரிகள் அந்த அழைப்புகளை உண்மை என்று நம்பி இருக்கின்றனர். எனவே, அந்த உத்தரவுகள் உண்மை என்று நம்பி முடக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.32 கோடியை குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் வங்கிக் கணக்குக்கு வங்கி அதிகாரிகள் அனுப்பி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரிக்கு இது ஒரு மோசடியாக இருக்கலாம் என்று திடீரென சந்தேகம் வந்தது. இதையடுத்து வங்கி தரப்பில் இருந்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹர்ஜேஸ் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரின் புலனாய்வில் மூன்று பேர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
கிளப்புகளில் ஜாலி ஆட்டம்: முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து மூவரில் ஒருவருக்கு அனுப்பட்ட வங்கி கணக்கில் எங்கு பணம் எடுத்தனர் என்று போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் கிளப்புகளில் ஆட்டம் போட்டு ஜாலியாக இருந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.63 லட்சத்தை மட்டும் போலீசார் கைப்பற்றினர்.
போலீசாரின் விசாரணையின் போது, அபிமன்யு கணக்குக்கு வங்கியில் இருந்து பணம் அனுப்பப்பட்டது என்றும், இதில் பாதிப் பணத்தை நீரஜ், சாகர் ஆகியோரின் வங்கிக் கணக்குகளுக்கு அபிமன்யு மாற்றியது தெரிய வந்தது. அந்த பணத்தில் ரூ.38 லட்சத்தை காசினோ கிளப்புகள், பப்புகளில் ஜாலியாக பொழுதைப் போக்கி செலவழித்ததாக சாகர் சொல்லி இருக்கிறார். இந்த மோசடி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு்ள்ளனர். இந்த மோசடிக்கு வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.