கல்பெட்டா: கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாத இறுதியில் தொடர் கனமழை பெய்தது. இடைவிடாத பெய்த பேய் மழையால் சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமங்களில் ஜூலை 30ம் இரவு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு, குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மலையோர வீடுகள் மண்ணில் புதைந்தன. நிலச்சரிவில் சிக்கிய 400க்கும் மேற்பட்டோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த கோர விபத்தில், பல பேர் தங்களது குடும்பத்தை இழந்து நின்றதும், பெற்றோரை இழந்த குழந்தைகள், அரவணைப்பின்றி பசியால் துடித்த துயர நிகழ்வும் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், இப்பேரழிவில் தனது தாய், தந்தை, தங்கை உட்பட 9 குடும்ப உறுப்பினரையும் இழந்து தவித்து வந்த இளம்பெண், தனது வருங்கால கணவனையும் சாலை விபத்தில் பறிகொடுத்த சோக நிகழ்வு, கேரள மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயநாட்டில் கடந்த ஜூன் 30ம் தேதி முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஸ்ருதியின் (24) பெற்றோர், தங்கை உட்பட 9 குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டபோது, ஸ்ருதி கோழிக்கோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கணக்காளராக பணியில் இருந்துள்ளார். தனது ஒட்டுமொத்த குடும்பத்தையே இழந்து தவித்த ஸ்ருதிக்கு அவரது காதலன் ஜென்சன் (27) ஒரே துணையாக இருந்துள்ளார்.
ஜென்சனும், ஸ்ருதியும் பள்ளி பருவத்திலிருந்தே பழகி வந்துள்ளனர். நாளடைவில் இருவரும் காதலிக்கவும் தொடங்கினர். அம்பலவயல் அருகே உள்ள ஆண்டூரைச் சேர்ந்த ஜெர்சனுக்கு பெற்றோரும், ஜென்சி என்ற சகோதரியும் உள்ளனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பழகி வரும் இருவரது திருமணம் இந்தாண்டு டிசம்பரில் நடக்க இருந்தது. இதனிடையே, ஸ்ருதியின் குடும்பம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததால், இந்த மாதம் பதிவு திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: ரீல்ஸ் மோகத்தால் குடும்பமே சிதைந்தது.. ரயில் மோதி 3 வயது சிறுவன் உட்பட மூவர்பலி.. உ.பி.யில் சோகம்!
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஜென்சனும், ஸ்ருதியும் மினி வேனில் சென்றுள்ளனர். அப்போது அந்த வேனை ஜென்சன்தான் ஓட்டியுள்ளார். வேன் கல்பெட்டா அருகே வெள்ளரம்குன்னு என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த பேருந்து மோதி, பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த வேனில் பயணித்தவர்கள் லேசான காயங்களுடன் தப்பிக்க, ஜென்சனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்ருதிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் மேப்பாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜென்சனுக்கு, மூலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்ததால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.50 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். காலில் காயம் அடைந்த ஸ்ருதிக்கு மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நிலச்சரிவில் பறிகொடுத்த ஸ்ருதிக்கு ஜென்சன் மட்டுமே உற்ற துணையாக இருந்து வந்தார். தற்போது அவரும் சாலை விபத்தில் இறந்துவிட்டதால் ஸ்ருதியின் நிலை விவரிக்க முடியாத சோகமாக மாறியுள்ளது. மேலும், நிலச்சரிவு ஏற்பட்டபோது ஸ்ருதியின் வீட்டில் இருந்த 4 லட்சம் ரூபாய் ரொக்கம், 15 சவரன் நகைகளும் அடித்து செல்லப்பட்டுள்ளன. குடும்ப உறுப்பினர்களும், சேர்த்து வைத்த செல்வமும் பறிபோனாலும் காதலனை கரம் பிடித்து வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்த ஸ்ருதிக்கு அதுவும் கனவாக கலைந்து போயுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்