புதுடெல்லி: டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து, அந்த அமைப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வேறு ஒரு உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த மார்ச் 20ஆம் தேதி விசாரணை மேற்கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, டாஸ்மாக் சோதனை வழக்கின் முதல் தகவல் அறிக்கை நகல்கள், அமலாக்கத்துறை வழக்கின் தகவல் அறிக்கை மற்றும் சோதனையின் போது டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட இதர ஆதாரங்களையும் தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும் டாஸ்மாக் நிறுவனத்தில் மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என்று கூறிய உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மார்ச் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில், மதுபான நிறுவனங்கள் தொடர்பான பல நிதி மோசடிகளை கண்டறிந்து உள்ளோம். கணக்கில் வராத பணப்புழக்கம் மற்றும் சட்டவிரோதமாக பணம் வழங்கப்பட்டது ஆகியவை குறித்து கண்டறிந்து இருப்பதாக கூறப்பட்டிருந்தது. மேலும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு நெருக்கடி தரக் கூடாது என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிடும்படியும் டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: 'நீட் தேர்வு' விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர ஒன்றிய அரசு மீண்டும் மறுப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!
இந்த நிலையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் ஆகியோர் கடந்த மார்ச் 25ஆம் தேதி அறிவித்தனர். ஆனால், எதற்காக வழக்கின் விசாரணையில் இருந்து விலகுகின்றோம் என்பதற்கான காரணம் எதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியன், கே.ராஜசேகர் அமர்வு விசாரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "டாஸ்மாக் நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. இது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனை வேறு ஒரு உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்,"என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி தெரிவித்த அம்சங்களை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்வதாக கூறியது. மேலும் அப்போது விக்ரம் சவுத்ரி, "சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கின் அடுத்த விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா, இந்த வழக்கு பட்டியலிடப்படும் என்று கூறினார்.
உயர் நீதிமன்றம் ஒன்றில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கை வேறு ஒரு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோருவதை அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 139ஏ அனுமதிக்கிறது. இந்த பிரிவின் கீழ்தான் தமிழ்நாடு அரசு மனு செய்துள்ளது.
