புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக ராகுல், சோனியாவின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அவர்களுக்கு எதிராக முதன்முறையாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது அவர்களுக்கு பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
மறைந்த பிரதமர் ஜஹவர்லால் நேருவால் தொடங்கப்பட்ட 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை நிறுவனம் சார்ந்து பல ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 10 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், இதில் பல சட்டவிரோத பணப்பரிமாற்றங்களும்நடந்திருப்பது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கை அமலாக்தத்துறையும் கையில் எடுத்து தீவிர விசாரணையில் இறங்கியது.
இதனிடையே, இந்த வழக்கில் ரூ.988 கோடி மதிப்பிலான சொத்துகளில் மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அண்மையில் தெரிவித்திருந்தது. இதன்பேரில், ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் 76 சதவீத பங்குகளை வைத்திருக்கும் 'யங் இந்தியா' நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.661 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நோட்டீஸை இரு தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அனுப்பியது. மேலும், அந்த சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது.
இந்த சூழலில்தான், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இப்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில் சோனியா, ராகுல் காந்தி மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் அயல்நாட்டு பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா, ராஜீவ்காந்தி அறக்கட்டளையின் அறங்காவலர் சுமன் துபே ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த சூழலில், இக்குற்றப்பத்திரிகையை பரிசீலித்த சிறப்பு நீதிபதி விஷால் கோஹ்னே, இதுதொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்