அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றபோது, வெப்பத்தின் தாக்கம் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை மயக்கமடைந்தார். அதனைக் கண்ட கட்சித் தொண்டர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தற்போது அவர் நலமாக உள்ளதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ப.சிதம்பரம் அகமதாபாத் சென்றிருந்தார். அங்கே உள்ள மகாத்மா காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏப்ரல் 8, 9ஆகிய இரண்டு நாட்கள் காங்கிரஸ் தேசிய மாநாடு நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
#WATCH | Ahmedabad, Gujarat: Congress leader P Chidambaram fell unconscious due to heat at Sabarmati Ashram and was taken to a hospital. pic.twitter.com/CeMYLk1C25
— ANI (@ANI) April 8, 2025
மேலும், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதில், தமிழ்நாடு சார்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பங்கேற்றிருந்தார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை சௌந்தரராஜன் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்!
அதைத் தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றபோது, வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் அவர் மயங்கியுள்ளார். தற்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பதிலளித்த அவரது மகனும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், "தனது தந்தை நலமாக உள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்," எனத் தெரிவித்தார்.
தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ள ப.சிதம்பரம் நன்றி தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கடும் வெயிலின் காரணமாக நீரிழப்பு (dehydration) ஏற்பட்டது. மருத்துவமனையில் எல்லாச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இப்பொழுது நலமாக இருக்கிறேன். எல்லோருக்கும் நன்றி," எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் ப.சிதம்பரம். முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்த இவர், மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் போது, உள்துறை மற்றும் நிதி போன்ற துறைகளை வகித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 79 வயதான இவர், காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவர் மற்றும் ஒரு வழக்கறிஞரும் ஆவார். அமெரிக்கா சமீபத்தில் விதித்த பரஸ்பர வரி உட்பட பல விஷயங்களில் அவர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை விமர்சித்து வருகின்றார். 1969-ல் முதன்முதலில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972-ல் அரசியலில் நுழைந்து பல்வேறு பதவிகளில் உயர்ந்தார். மேலும், காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான சோனியா காந்திக்கு நெருக்கமானவராக உள்ளவர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.