ஹிசார்: ஹரியானா மாநிலத்தில் உள்ள இந்த நகரம் இரும்பு உற்பத்தி, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்புக்காக பெயர் பெற்றதாகும். வித்தியாசமான குங்குமப்பூப் பண்ணை வளர்ப்பாலும் தற்போது கவனம் பெற்றுள்ளது.
ஹிசார் நகருக்குட்பட்ட ஆசாத் நகரில் உள்ள பெரும்பாலான வீடுகளின் மொட்டைமாடிகளில், துணிகள் உலர்த்தப்பட்டிருக்கும். தண்ணீர் தொட்டிகள் இருக்கும். ஆனால் இவற்றுக்கெல்லாம் மாறாக மொட்டைமாடியில் ஒரு சீல் வைக்கப்பட்ட அறை. அங்குள்ள ஜன்னல்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் அறையில் மண் இல்லாமல் மென்மையான குங்குமப்பூவை வளர்க்க வடிவமைக்கப்பட்ட குளிர்ச்சியான, ஈரப்பதமான மற்றும் லேசான வெளிச்சம் ஆகியவற்றுடன்கூடிய காலநிலை உருவாக்கப்பட்டுள்ளது.

வீடியோவால் ஏற்பட்ட திருப்புமுனை: நவீன், பிரவீன் சிந்து ஆகிய சகோதரர்களின் மூளையில் உதித்த புதுமையான இந்த யோசனை, அவர்கள் இருவரையும் வேளாண் வணிக தொழில்முனைவோராக மாற்றி இருக்கிறது. மொட்டைமாடி அறையில் அமைக்கப்பட்டுள்ள குங்குமப்பூ பண்ணை அவர்களின் குடும்பத்தின் நீடித்த வாழ்வாதாரமாக மாற்றியுள்ளதுடன், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக பாரம்பரிய விவசாய நடைமுறைக்கு மாறாக விடாமுயற்சி மற்றும் கற்பனையுடன் புதுமையான திருப்பத்தை மேற்கொண்டனர். இன்றைக்கு அவர்கள் ஹிசார் நகரில் குங்குமப்பூ வளர்ப்போர்களாக உயர்ந்து நிற்கின்றனர்.

வழக்கத்துக்கு மாறாக வேறுபட்ட, நகர்ப்புற சூழலில் 2018ஆம் ஆண்டு மொபைல்ஃபோன் மூலம் தான் இவர்களின் வெற்றிக்கதை தொடங்கியது. நவீன் ஹோட்டல் நிர்வாகத்தில் பட்டம் படித்தவர். ஒரு தருணத்தில் காஷ்மீர் போன்ற குளிர் பிரதேசங்களை தவிர்த்து வேறு இடங்களில் குங்குமப்பூவை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த வீடியோ அவருக்கு மொபைல் வாயிலாக வந்தது. அதுகுறித்து மேலும் விசாரிப்பதற்கு தமது சகோதரரும் பொறியியல் பட்டதாரியுமான பிரவீனுக்கு அந்த வீடியோவை அவர் அனுப்பினார். குங்குமப்பூ என்றாலே காஷ்மீர் என்று அறியப்படும் சூழலில், காஷ்மீரைப் போல குளிரான சூழல் இல்லாத இடத்தில் குங்குமப்பூவை வளர்ப்பதற்கான சாத்தியம் குறித்த வாய்ப்புகளை இருவரும் தேடினர். ஹிசாரில் குங்குமப்பூ வளர்க்க முடியுமா என்ற கவலையை அவர்கள் கொண்டிருந்தபோதிலும், வலுவான ஒரு நம்பிக்கையுடன் முயற்சிப்பது என்று தீர்மானித்தனர்.

முயற்சிக்கு கிடைத்த வெற்றி: கள ஆய்வுகளுக்குப் பின்னர் பரிசோதனைகள், தவறுகள் ஆகியவற்றுக்கு இடையே ஜம்மு-காஷ்மீரில் இருந்து உயர் தரமான குங்குமப்பூ தண்டு கிழங்குகளை வாங்குவதற்கான பணியைத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக 15க்கு 15 என்ற அளவில் மொட்டைமாடியில் ஒரு அறையை உருவாக்கி, காற்று பரவல் முறைக்கு தேவையான தொழில்நுட்ப சாதனங்களை நிறுவினர். ஊட்டச்சத்து மிக்க தண்ணீருடன் அறையில் நிலவிய காற்றை சுவாசித்து குங்குமப்பூ தண்டுகள் வளர ஆரம்பித்தன.
அவர்கள் அறையின் வெப்பநிலையை சரிசெய்தனர், ஈரப்பதத்தை ஒழுங்குபடுத்தினர், கட்டுப்படுத்தப்பட்ட ஒளியை உமிழும் விளக்குகளை பொருத்தினர். அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. பாரம்பரியமாக வளர்வதற்கு சாதகமான பருவநிலையைக் கொண்ட காஷ்மீரில் மட்டும் பயிரிடப்படும் 'சிவப்பு தங்கம்' என்று வர்ணிக்கப்படும் குங்குமப்பூ ஹரியானாவின் ஹிசார் நகரில் ஓர் வீட்டின் மொட்டைமாடியில் வளரும் அதிசயம் நிகழ்ந்தது.

இதையும் படிங்க: 81 வயதிலும் கலக்கும் 'ஸ்டார்ட்அப் ராணி' ஷீலா! எம்பிராய்டரி பொருட்களை ஆன்லைனில் விற்று அசத்தல்!
அத்துடன் இரட்டை சகோதரர்கள் தங்களின் முயற்சியை கைவிட்டுவிடவில்லை. குங்குமப்பூ தண்டுகளை பிளாஸ்டிக் டிரேக்களில் தொங்கவிட்டனர். தண்ணீர் வாயிலாக ஊட்டச்சத்துகளை கொடுத்தனர். அறையில் பொருத்தப்பட்ட எல்இடி விளக்குகள் இயற்கை சூழல் போன்ற ஒளியைத் தந்தன. இந்த முறையில் எந்தவொரு சவால் அல்லது பூச்சி , நோய் தொற்றுகளை எதிர்கொள்ளாமல் மூன்று மாதங்களில் குங்குமப்பூ அறுவடைக்கு தயாரானது. ஒவ்வொரு சுழற்சியிலும் அவர்கள் இப்போது மூன்று கிலோ குங்குமப்பூவை உற்பத்தி செய்கின்றனர். ஒரே ஒருமுறை அறுவடை செய்வதன் மூலம் அவர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கிடைக்கிறது. உயர்ந்த தரத்தின் காரணமாக,தாங்கள் அறுவடை செய்துவரும் குங்குமப்பூவை இந்தியாவுக்குள் மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, வங்கதேசம் ஆகிய நாடுகளும் ஏற்றுமதி செய்து வருகின்றனர் இந்த ஹரியானா சகோதரர்கள்.
போலியை கண்டறிவது எப்படி?: சந்தையில் ஏராளமான போலி குங்குமப்பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தங்களின் குங்குமப்பூ உண்மையானது என்பதை வாடிக்கையாளர்களிடம் அவர்கள் எப்படி நிரூபிக்கின்றனர் என்பது பற்றி கூறிய நவீன், "தண்ணீரில் குங்குமப்பூவை கலக்கும்போது உண்மையான குங்குமப்பூவானது லேசான தங்க நிறத்தினாலான மஞ்சள் நிறத்துக்கு தண்ணீரை மாற்றும். ஆரஞ்சு வண்ணமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ தண்ணீர் மாறாது. தனித்துவமான மணம் மற்றும் சற்று கசப்பான சுவை கொண்டதாக இருக்கும். நூலைப் போன்று இருக்கும் குங்குமப்பூ ஒரு பக்கம் தடிமனாகவும், இன்னொரு பக்கம் குறுகலாகவும் இருக்கும். ஆனால் போலியான குங்குமப்பூ இரண்டு புறங்களிலும் ஒரே மாதிரி இருக்கும்,"என்கிறார் நவீன்.
தரத்தை வலியுறுத்துவதால் அவர்களுக்கு விசுவாசமான வாடிக்கையாளர்கள் கட்டமைப்பு உருவானது. அவர்களது உற்பத்தி குறித்த தகவல்கள் தனிப்பட்ட தொடர்புகள் மூலம் பரவத்தொடங்கின. சமூக வலைதளங்கள், பயிற்சி முகாம்கள் நடத்தும் பலகலைக்கழக வட்டாரங்கள் வாயிலாகவும் அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் குவிந்தனர். அவர்கள் தங்கள் குங்குமப்பூ பண்ணை குறித்த தகவல்களை ரகசியமாக வைத்திருக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக எண்ணற்ற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.

"ஹரியானா முழுவதும், அண்டை மாநிலங்களிலும் 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு குங்குமப்பூ பண்ணை குறித்து பயிற்சி கொடுத்திருக்கின்றனர். அவர்களில் பல இளம் விவசாயிகள், இவர்களைப் போலவே அவர்களுடைய சொந்த கிராமத்தில் அல்லது நகரில் குங்குமப்பூவை வளர்த்து அறுவடை செய்கின்றனர்," என்றார் பிரவீன்.
மருத்துவ பயன்கள்: இருவரும் கர்னல் பல்கலைக்கழகத்தில் பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர். பயிற்சியின்போது குங்குமப்பூ பண்ணையை எப்படி அமைப்பது என்பதை கற்றுத் தருகின்றனர். "தண்ணீர் குறைவாக கிடைக்கும் இடங்களில் கூட இந்த முறை பலன் அளிக்கிறது. பாரம்பரியமான பண்ணை முறையைப் போல அன்றி ஏரோபோனிக்ஸ் முறையில் 90 சதவிகிதம் வரை நீரை சேமிக்கலாம். இதற்கிடையே மண் அரிப்பு இல்லை. எந்தவொரு பூச்சி மருந்தும் உபயோகிக்கத் தேவையில்லை. மேலும் இந்த முறையில் குங்குமப்பூ 30-50 சதவிகிதம் வரை வேகமாக வளரும்," என்று விவரிக்கிறார் பிரவீன்.
குங்குமப்பூ வணிகம் அதிகரித்த நிலையில், அதன் மருத்துவ குணங்கள் குறித்த தகவல்களை தங்களது வாடிக்கையாளர்களிடம் அதிக அளவு அவர்கள் பகிர்கின்றனர். "குங்குமப்பூ ஒரு ஆரோக்கியத்துக்கான ஊக்கியாகும். மனஅழுத்தத்தை குறைக்கிறது. நினைவுத்திறனை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. தோலை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும், ஜீரண சக்தியை மேம்படுத்துவதற்கும் பாரம்பரிய மருந்தாகவும் உபயோகிக்கப்படுகிறது. மிகவும் முக்கியமாக உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். சூடான பாலில் இதனை கலந்து, ஊட்டசத்து பானமாகவும் குடிக்கலாம்,"என்றார் நவீன்.
பெரிய தாக்கம்: இந்த சகோதரர்களின் வெற்றி என்பது வர்த்தகத்தை அதிகரிப்பதோடு மட்டும் நின்று விடவில்லை. புதுமையான வேளாண்மை பங்களிப்புக்கான விருதுகளையும் அவர்கள் பெற்றுள்ளனர்.
"எங்களைப் பொறுத்தவரை உண்மையான விருது என்பது தாக்கத்தை ஏற்படுத்துவதில்தான் அடங்கியிருக்கிறது. குடும்பத்தின் வாழ்வாதாரம் நீடித்திருப்பதற்காக இளைஞர்கள் இதனை மேற்கொள்வதையே பெரிய தாக்கமாக கருதுகின்றோம். இதுதான் எங்களை தொடர்ந்து இயங்கச் செய்கிறது,"என்று புன்னகைக்கிறார் நவீன்.
சகோதரர்கள் இருவரும் எதிர்காலத்துக்காக திட்டமிடுகின்றனர். பயிற்சி மையங்கள் தொடங்குவது, வட இந்தியா முழுவதிலும் மொட்டைமாடிகளில் குங்குமப்பூ வளர்ப்பவர்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு கட்டமைப்பை தொடங்குதல் என தங்களின் நிறுவனத்தை விரிவாக்கும் கனவு பற்றி பேசுகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்