பெங்களூரு: ஐபிஎல் சாம்பியனான ஆர்.சி.பி அணியின் வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததை காரணம் காட்டி, பெங்களூரு மாநகர காவல் ஆணையர் உள்பட 5 அதிகாரிகளை கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது.
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி (ஆர்.சி.பி) சாம்பியன் பட்டத்தை வென்றது. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக இந்த அணி கோப்பையை வென்றதையடுத்து, நாடு முழுவதுமுள்ள ஆர்.சி.பி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அது போல் பெங்களூரு அணி சார்பாக சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அங்கு கிரிக்கெட் வீரர்களை காண ஆவலுடன் ரசிகர்கள் திரண்டு வந்தனர். அதில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா, அமைச்சர்கள் எச்.கே. பாட்டீல், சுதாகர், மகாதேவப்பா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சித்தராமைய்யா, இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில் தனிநபர் ஆணையத்தை நியமித்திருப்பதாக தெரிவித்தார்.
பெங்களூரு அணி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான டிஎன்ஏ (DNA Entertainment Networks Pvt. Ltd.) மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகளை கைது செய்ய அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த மூன்று அமைப்புகளின் மீதான விசாரணையை சி.ஐ.டி-யிடம் ஒப்படைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க |
தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பேசிய முதலமைச்சர் சித்தராமைய்யா, அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை மற்றும் அலட்சியமே இத்துயர சம்பவத்திற்கு காரணம் என்பது தெரியவந்திருப்பதாகக் கூறினார். இதனால், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பி. தயானந்த், கூடுதல் காவல் ஆணையர் விகாஸ் குமார், மத்திய துணை ஆணையர் சேகர் தேக்கன்னவர், கப்பன் பூங்கா துணை ஆணையர் பாலகிருஷ்ணா, கப்பன் பூங்கா காவல் நிலைய ஆய்வாளர் கிரிஷ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட தயானந்திற்குப் பதிலாக சீமந்த் குமார் சிங்கை பெங்களூரு மாநகர காவல் ஆணையராக நியமித்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.