By மகேஷ் காம்ப்ளே
கோலாப்பூர்: இமாசலப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் மட்டும் விளையும் கருஞ்சிவப்பு நிறத்துடன், இனிப்பு சுவையுடன் கூடிய ஆப்பிள், இப்போது மகராஷ்டிராவின் தென் மேற்கு பகுதியில் கோலாப்பூர் மாவட்டம் ஹட்கனங்கலே தாலுகாவில் உள்ள யல்குட் கிராமத்தில் விளைவிக்கப்படுகிறது.
45 டிகிரி சென்டிகிரேட் வெப்பம்: அடர் சிவப்பு நிறத்துடன் கூடிய ஆப்பிள் இப்போது அந்த பிராந்தியத்தில் பேசு பொருளாகி உள்ளது. அந்த பிராந்தியம் வழக்கமாக எப்போதும் அதிக வெப்பம் கொண்ட பகுதியாகும். கோடை காலங்களில் வெப்பம் தாங்காமல் நிலம் வெடிப்புக்கு உள்ளாகும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கும். எனவே இந்த பிராந்தியத்தில் உள்ள விவசாயிகள் கரும்பு போன்ற வழக்கமான பயிர்களையே இங்கு விளைவிப்பது வழக்கம். ஆனால், அந்த பிராந்தியத்தை சேர்ந்த குறு விவசாயியான அனில் மங்காவவே, சிந்தித்துக் கூட பார்க்க முடியாத ஒரு கனவை நனவாக்கி உள்ளார். தமது அரை ஏக்கர் நிலத்தில் ஆப்பிளை வளர்த்து சாதித்துள்ளார்.
அடிப்படையான கல்வி மட்டுமே பெற்ற அனில் மங்காவவே, கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு ஆப்பிள் விளைவிப்பது எப்படி என்ற யூடியூப் வீடியோ ஒன்றை ஆர்வத்துடன் பார்த்தார். அதன் பின்னர் ஆப்பிள் விளைவிப்பது குறித்து ஆராய்ச்சியில் இறங்கிய அவர், சோலாப்பூர் மாவட்டம் அகுஜ் அருகில் உள்ள தஹிகான் கிராமத்துக்கு சென்றார். அங்கிருந்து 45 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் கூட தாக்குப் பிடித்து வளரக் கூடிய அன்னா, ஜி-9 என்ற இரண்டு ஆப்பிள் கன்றுகளை வாங்கி வந்தார்.

மரத்துக்கு 35 ஆப்பிள்கள்: அவர் 50 ஆப்பிள் கன்றுகளை தமது நிலத்தில் நட்டார். அந்த ஆப்பிள் கன்றுகளுக்கு சாணம் உள்ளிட்ட இயற்கை இடு பொருட்களை மட்டுமே அளித்தார். வெப்பத்தை கட்டுப்படுத்துவது அவரது கைகளில் இல்லை. அதே நேரத்தில் நிறைய தண்ணீர் பாசனம் செய்தார். தாவரங்களில் வளர்சிதை மாற்ற செயல்பாடு குறைவாக உள்ள குளிர் காலத்தில் ஆப்பிள் வளரும் வகையில் நட்டிருந்தார். குளிர் காலமான டிசம்பரில் ஆப்பிள் கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சவில்லை. இளவேனிற் காலத்தில் வளர்ந்த நிலையில் இருந்த ஆப்பிள் மரங்கள் பூக்கத் தொடங்கின. 2025 ஆம் ஆண்டின் இந்த ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு ஆப்பிள் மரத்திலும் 30 முதல் 35 ஆப்பிள்கள் காய்ந்திருந்தன.
இதையும் படிங்க: காஷ்மீர் குங்குமப்பூவை வீட்டு மொட்டைமாடியில் வளர்க்கும் ஹரியானா இளைஞர்கள்! - லட்சங்களை குவிப்பது எப்படி?
ஆனால், அனில் மங்காவவே, ஒரு பழம் தரும் மரத்தை மட்டுமே நிலத்தில் பயிரிட்டு அது பலன் அளிக்காவிட்டால் அதனால் நேரிடும் அபாயத்தை சந்திக்க அவர் தயாராக இல்லை. மண்ணில் ஈரப்பதம் நிலைத்திருக்கும் வகையில் அவர் நடவடிக்கை மேற்கொண்டார். ஆப்பிள் மரம் தவிர அதனோடு ஊடு பயிர்களாக வெங்காயம், பூண்டு, நிலக்கடலை, முருங்கை ஆகியவற்றையும் பயிரிட்டார். ஈரப்பதத்தை தக்க வைப்பது மட்டுமின்றி இந்த பயிர்கள் அதிக வெப்பத்தையும் கட்டுப்படுத்தின. அதே நேரத்தில் மண் அரிப்பையும் தடுத்தன. இந்த சூழல்கள் எல்லாம் ஆப்பிள் வளர்வதற்கு சாதகமாக இருந்தன.

"இந்த பிராந்தியத்துக்கு சற்றும் தொடர்பில்லாத பயிரை பயிரிட முயற்சித்த போது, அந்த திட்டம் தோற்று விட்டால், வேறு ஒரு திட்டத்தையும் கையில் வைத்திருந்தேன். ஆப்பிள் மரத்துக்கு பெரும் அளவுக்கு பாரமரிப்பு தேவை என்பது எனக்குத் தெரியும். தண்ணீர் போதுமானதாக இல்லை. ஆனால், பயிரிட்ட தருணம் மற்றும் வெப்பத்தை நிர்வகிப்பது மேற்கொள்ளப்பட்டது. எனவே, நான் ஆப்பிளுடன் வேறு பயிர்களையும் ஊடுபயிராக பயிரிட்டேன்,"என்றார் அனில் மங்காவவே.
புதிய பரிசோதனை முயற்சி: அனில் மங்காவவே குடும்பத்தினர் வேளாண்மையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெவ்வேறு துறையில் அவர்கள் நிபுணத்துவம் கொண்டிருந்த போதும், அவரது குடும்பத்துக்குச் சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தில் பெரும்பாலும் கரும்பு மட்டுமே பயிரிடுகின்றனர். அரை ஏக்கர் நிலத்தில் மட்டும் சில புதுமையான முயற்சிகளை செய்து பார்க்கின்றனர். மேலும் அனில் மங்காவவே குடும்பத்தினர் குங்குமப்பூ, மா, கொய்யா மற்றும் சப்போட்டா ஆகியவற்றையும் பயிரிட்டு இருக்கின்றனர். இந்தப் பகுதியில் உள்ள இதர விவசாயிகளும் அவரை பின்பற்றுகின்றனர்.

"வித்தியாசமான பழப் பயிர்களை முயற்சித்துப் பார்க்கும் அனைத்து விவசாயிகளையும் நான் வாழ்த்துகிறேன். வேளாண்மை செய்வதன் மூலம் வருவாய் ஈட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இதையெல்லாம் முயற்சிக்க வேண்டியது முக்கியமாகும். நாட்டின் இந்தப் பகுதியில் ஆப்பிள் விளையுமா? என்ற சிந்தனை இருந்தது. நாங்கள் துணிந்து சிறிய அளவிலான நிலத்தில் பரிசோதனை முயற்சியாக அதனைப் பயிரிட்டதால் அதன் உண்மை என்ன என்பது தெரிந்து விட்டது,"என்று அறிவுறுத்தினார் மங்காவே.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்