மசூலிப்பட்டினம்: ஆந்திரா மாநிலத்தில் இயங்கி வரும் நிம்மகுரு குருகுலப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ரூ.3 கோடி செலவில் பள்ளியை சீரமைத்து, புதிய அதிநவீன மாணவர்கள் விடுதி கட்டி தந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்திற்கு நல்ல மனிதர்களை உருவாக்கித் தருவதில் பள்ளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. அந்த வகையில் மாணவர்கள் தங்களின் சாதனைகள் மூலம் தான் பயின்ற பள்ளிக்கு, தேடித் தரும் புகழும் அளப்பரியது.
இந்த அன்பு பரிமாற்றத்தில் முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு நிதி வழங்கி, வளரும் தலைமுறை மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் நிம்மகுரு குருகுலப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து ரூ.3 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிம்மகுரு குருகுலப் பள்ளியானது 1987ஆம் ஆண்டும் ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமராவ் (என்.டி.ஆர்) நன்கொடையாக வழங்கிய 8 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டது. இந்த பள்ளி நந்தமுரி லட்சுமையா மற்றும் வெங்கடரவம்மா குருகுல தொழிற்கல்வி பள்ளி மற்றும் கல்லூரி என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது. இங்கு 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பயின்ற பலர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்வதுடன், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் நிபுணர்களாகப் பதவி வகித்து, பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் இந்த பள்ளி தொடங்கப்பட்டு 38 ஆண்டுகளான நிலையில் பள்ளியின் மறு சீரமைப்பு மற்றும் பிற வசதிகள் அமைத்துத் தர வேண்டி அரசிடம் பள்ளி நிர்வாகம் கோரிக்கை வைத்தது. இதற்கிடையே, அந்த பள்ளியின் 34-வது கல்வியாண்டைச் சேர்ந்த 150 முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து நிதி வழங்கி பள்ளியை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.
இந்த முயற்சியில் ரூ.10,000 முதல் ரூ.20 லட்சம் வரை நிதி வழங்கப்பட்ட நிலையில் முன்னாள் மாணவர்களுள் ஒருவரான பிடுகு சுதீர் என்பவர் ரூ.60 லட்சத்தை நிதியாக வழங்கி பள்ளி நிர்வாகத்தை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இது குறித்து பேசிய பிடுகு சுதீர், “நான் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தின் இயக்குநாக உள்ளேன். நான் இந்த நிலைக்கு வளர்ந்து வர எனது பள்ளி தான் காரணம். அந்த பள்ளியில் தான் எனது அத்தை பிடுகு ஒபுலம்மா ஆசிரியையாக பணி புரிந்து வந்தார். அவர் காட்டிய வழிகாட்டுதல் படிதான் நான் இன்று நல்ல நிலையை அடைந்துள்ளேன்.
இந்த பள்ளி மற்றும் எனது அத்தையால் தான் இன்று நான் என் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளேன். நான் அளித்துள்ள நிதியை விட இவர்கள் நிறையச் எனக்கு செய்துள்ளனர். அந்த பள்ளியில் எனது அத்தையின் நினைவானது இருக்க வேண்டும் என நினைத்து அவர் பெயரில் ஒரு கட்டடத்தை அமைக்க நினைத்தேன்” என்றார். மேலும் இந்த பள்ளியில் தற்போது 200 மாணவர்களுக்கான அதிநவீன விடுதி கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த கட்டடத்திற்கு முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளியின் முதல் முதல்வரான பி.எல். நரசிம்மன் என்பவரின் பெயரை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: காஷ்மீர் குளிரில் விளையும் ஆப்பிள், மகாராஷ்டிராவின் வெப்பத்தில் வளருமா? - சாதித்த விவசாயி! |
தொடர்ந்து நிகழ்வு குறித்துப் பேசிய ’முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர்’ பி.எஸ். சொக்கலிங்கம், “ இந்த பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களை நல்ல வகையில் உருவாக்கிக் கொடுத்துள்ளது. தற்போது அமைத்துள்ள நவீன விடுதி எங்களது நன்றி உணர்வை வெளிப்படுத்து செயலாக பார்க்கிறோம். மேலும், இந்த பள்ளியை புதுப்பொலிவுடன் மீட்டெடுக்க உதவுமாறு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் கல்வி அமைச்சர் லோகேஷிடம் வேண்டுகோள் வைக்கிறோம்” என்றார். இவ்வாறு முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து நிதி வழங்கி பள்ளியை மறு சீரமைத்து, அதிநவீன விடுதி வசதி ஏற்படுத்தித் தந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு அந்த பள்ளிக்கு மீண்டும் ஒரு பெருமையைத் தேடித் தந்துள்ளது எனலாம்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.