கயா: இந்தியாவில் அதிக குற்ற சம்பவங்கள் நடக்கும் பகுதிகளாக வட மாநிலங்கள் கருதப்படும் நிலையில் கடந்த 111 ஆண்டுகளில் ஒரு குற்ற வழக்கு கூட பதிவாகாத கிராமம் ஒன்று பீகாரில் இருப்பது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதை பற்றிய சுவாரசிய பின்னணியை பார்க்கலாம்.
பீகாரின் மையப் பகுதியான கயா மாவட்டத்தில் பங்கட் என்ற ஒரு குக்கிராமம் உள்ளது. இங்கு கடந்த 111 ஆண்டுகளாக காவல் நிலையத்தில் ஒரு வழக்கு கூட பதிவானது இல்லை. 1914 ஆம் ஆண்டு வனப்பகுதியில் உருவான இந்த கிராமத்துக்கென சுய விதிகளை வகுத்து தலைமுறை தலைமுறையாக அதனை பின்பற்றியும் வருகின்றனர். ஊர் பிரச்சனை எல்லை கடந்து சென்று அமைதியை சீர்குலைக்க விரும்பாத இந்த கிராமத்தினர், ஒருமித்த கருத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.
இது குறித்து கூறும் ஊர் பெரியவர் ராம்தேவ் யாதவ் (76) '' பங்கட் கிராமத்தில் முதன்முதலில் குடியேறிய மக்களே விதிகளை உருவாக்கினர். இன்று வரை நாங்கள் அனைவரும் அதைப் பின்பற்றி வருகிறோம்'' என்று கூறுகிறார்.

60 வீடுகள் கொண்ட இந்த கிராமத்தில் சுமார் 600 பேர் வசிக்கின்றனர். இதில் மொத்தம் மூன்று சாதியினர் உள்ளனர். இவர்களுக்குள் ஏதேனும் தகராறு ஏற்பட்டால் கிராம பெரியவர்களே அதனை தீர்த்து வைக்கின்றனர். இதற்காக ஊர் பெரியவர்கள் தலைமையில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு உள்ளது. இந்த குழு சம்பந்தப்பட்ட அனைவரிடமும் பேசி, பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைக்கிறது.
காவல் நிலைய கதவுகளைத் தட்டியதில்லை
இந்த கிராமத்தைச் சேர்ந்த ஹீரா ரவானி (45) ''எங்கள் யாருக்கும் காவல் நிலையத்தின் கதவுகளைத் தட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை '' என்று மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார். ''என் வாழ் நாளில் இதுவரை இங்கு காவல் துறையின் தலையீடோ அல்லது சட்ட வழக்கு பற்றியும் நான் கேள்விப்பட்டதில்லை. இந்த கிராமம் சுதந்திரத்திற்கு முன்பே உருவானது. இதுவரை கிராம எல்லைக்கு வெளியே யாருமே எந்தத் தொந்தரவையும் சந்தித்ததில்லை என்று என் தாத்தாவும், தந்தையும் எப்போதுமே சொல்வார்கள்'' என்றார்.

இது பற்றி அமாஸ் காவல் நிலைய ஆய்வாளர் சைலேஷ் குமாரிடம் கேட்ட போது, பங்கட்டில் இருந்து இதுவரை எந்த எஃப்ஐஆர்-ம் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். தொடர்ந்து விளக்கிய அவர், ''இந்த கிராமத்தை பற்றி அறிந்த பிறகு, நான் பதிவுகளைச் சரி பார்த்து, உள்ளூர்வாசிகள் மற்றும் கிராம தலைவருடன் விவாதித்தேன், ஆனால் உண்மையில் இந்தக் கிராமத்தில் இருந்து எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை" என்று ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.
பங்கட் கிராமத்தில் 10 வருடத்துக்கும் மேலாக தலைவராக இருந்து வரும் ராஜ் குமார் கெலாட் நம்மிடம் பேசுகையில், ''நாங்கள் அமைதியை விரும்பும் மக்கள், கிராமத்தின் அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் பிரச்சனைகளில் ஈடுபட விரும்பவில்லை'' என்றார்.

இது குறித்து மேற்கொண்டு பேசிய அவர், ''எந்த தகராறு ஏற்பட்டாலும் உடனே பஞ்சாயத்துக்கு வரும். இரு தரப்பில் இருந்து தலா இரண்டு பிரதிநிதிகள் மற்றும் அதை விசாரிக்க பொதுவான ஒரு ஊர் பெரியவர் கொண்ட குழு அமைக்கப்படும். அந்த பெரியவரை இரு தரப்பு பிரதிநிதிகளும் ஏற்றுக் கொள்ள கூடியவராக தான் இருப்பார். இந்த ஐந்து பேர் கொண்ட குழு முன்னிலையில் பிரச்சனை குறித்து விவாதிக்கப்படும். பின்னர் ஒருமித்த கருத்து எட்டியவுடன் இறுதி முடிவு அறிவிக்கப்படும். அந்த முடிவு எழுத்துபூர்வமாக இரு தரப்பும் ஒப்புக் கொண்ட பிறகு கையெழுத்திடப்படுகிறது'' என தெரிவித்தார்.
விதிகைள மீறினால் கரும்பு அடி
குறிப்பாக பஞ்சாயத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு விட்டால் அதனை யாருமே மீற முடியாது. அவ்வாறு மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மிகவும் அரிதாக மட்டுமே நடக்கும் சமயங்களில் பஞ்சாயத்து முடிவை மீறுபவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது அல்லது உடல் ரீதியான தண்டனையை கூட எதிர்கொள்வார்கள் என கூறிய ஊர் பெரியவர் ராம்தேவ் யாதவ், தனது வாழ்நாளில் இப்படி ஒருவர் 11 முறை கரும்பு அடிகளை எதிர்கொண்டதை நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய ராம்தேவ் யாதவ், ஒரு தடவை தகராறு ஒன்று காவல் நிலையம் வரை சென்றது எனக்கு நினைவிருக்கிறது. பிரச்சனை பெரிதாவதற்கு முன்பு கிராம பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து இரு தரப்பினரையும் கிராமத்திற்கு அழைத்து வந்து மத்தியஸ்தம் செய்து பிரச்னையை தீர்த்து வைத்தோம்'' என்பதை பகிர்ந்து கொண்டார். இதுபோல பஞ்சாயத்தில் விதிக்கப்படும் அபராத தொகையை கிராம மக்களின் அவசர உதவிக்காகவோ அல்லது ஏழை வீட்டில் நடைபெறும் திருமணங்களுக்காகவோ செலவிடப்படுகிறது என்ற ராம்தேவ் யாதவ், சில நேரங்களில் மக்களுக்கு கடனாகவும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
பங்கட் பெயர் எப்படி வந்தது?

இந்த கிராமத்துக்கு பங்கட் என பெயர் வந்தது குறித்து உள்ளூர் ஆசிரியர் அருண் குமார் தெரிவித்த தகவல் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த காலத்தில் சில குடும்பங்கள் காடுகள் நிறைந்த நிலத்தில் குடியேறியபோது துளசி யாதவ், நாதுனி யாதவ், முங்கேஷ்வர் யாதவ் மற்றும் சஜீவன் யாதவ் ஆகிய நான்கு பேர் விவசாயம் மற்றும் வீடுகளை கட்ட காடுகளை வெட்ட வேண்டியிருந்ததால் கிராமத்திற்கு 'பங்கட்' என்று பெயரிட்டனர். இது 'பன்' (காடு) மற்றும் 'கட்' (வெட்டு) ஆகிய இரண்டு சொற்களின் கலவையாகும்'' என்றார்.
இந்த கிராம மக்கள்தொகையின்படி, கிராமத்தில் 352 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமம் முக்கியமாக விவசாயத்தை நம்பியுள்ளது. இருப்பினும், கடந்த 15 ஆண்டுகளில், பல இளைஞர்கள் வேலைக்காக வேறு நகரங்களுக்குச் சென்றுள்ளனர். ஆரம்பத்தில் நான்கைந்து வீடுகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட இந்தக் கிராமத்தில் இப்போது சாலை, தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் உள்ளன.
படிப்பிலும் குறைவில்லை
பங்கட் இளைஞர்களின் கல்வி நிலையும் நன்றாக உள்ளது. பலர் வெளியில் வேலை செய்கிறார்கள். பல பெண்கள் பட்டதாரிகளாக உள்ளனர். மேலும் இங்கு ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. மேற்கொண்டு பள்ளி படிக்க விரும்புவோர், அருகிலுள்ள ஔரங்காபாத் மாவட்டத்தின் மதன்பூர் உயர்நிலைப் பள்ளியில் தங்கள் கல்வியைத் தொடருகிறார்கள்.
உள்ளூர் பத்திரிகையாளர் தனஞ்சய் குமார் கூறுகையில், ''தேர்தல் நேரங்களில் கூட பங்கட் மக்கள் ஒருமித்த முடிவையேதான் எடுக்கிறார்கள். யாருக்கு வாக்களிப்பது என்று கிராம மக்கள் தங்களுக்குள் முடிவு செய்து, எந்த வேட்பாளர் கிராமத்திற்கு நல்லது செய்வார் என்பதைப் பற்றி விவாதித்து அவர்களுக்கு வாக்களிப்பார்கள்'' என்றார்.
பங்கட் மக்களைப் பொறுத்தவரை ஒற்றுமையும், ஒழுக்கமும் அவர்களுக்குள் வேரூன்றிய மதிப்புகளாக கருதப்படுகிறது. அவர்களது முன்னோர்கள் அமைதியைப் பேணி, பிரச்சனைகளை இணக்கமாக தீர்த்து வைத்து மதிப்போடு வாழ்ந்ததால் இவர்களும் அந்த வழக்கத்தில் இருந்து பின்வாங்காமல் இருந்து வருகின்றனர். மேலும், விதிகள் நமது முன்னேற்றத்திற்காக இருக்கும்போது அதை இன்னும்கூட அதிகமாக்குவோம் என்று கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்