புதுடெல்லி: 2023 - 24 ஆம் நிதியாண்டில் தேசிய கட்சிகளில் அதிக நன்கொடை பெற்ற கட்சி பாஜக எனவும், பல்வேறு நிறுவனங்கள், தனிநபர்களிடம் இருந்து மொத்தம் 8,358 எண்ணிக்கையிலான நன்கொடைகள் மூலம் 2,243 கோடி ரூபாயை பாஜக பெற்றுள்ளது என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. தரவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.20,000-க்கும் அதிகமாக நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் பட்டியல் குறித்த அறிக்கையை இந்தச் சங்கம் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மொத்தம் 2,544.28 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 199 சதவீதம் அதிகமாகும். இதில், பாஜக நன்கொடையாக பெற்றுள்ள தொகையின் பங்கு மட்டுமே 88 சதவீதம். அதேபோல், 1,994 எண்ணிக்கையிலான நன்கொடைகள் வாயிலாக ரூ.281.48 கோடி பெற்று காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி (AAP), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்ச்சிஸ்ட்) ஆகியவை குறைந்த அளவிலான நன்கொடைகளை மட்டுமே பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி (BSP) வழக்கம்போல் ரூ.20 ஆயிரம் வரம்பிற்கு மீறி நன்கொடை எதுவும் பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக 2022 - 2023 ஆம் நிதியாண்டில் 719.858 கோடி ரூபாயை கட்சி நிதியாக நன்கொடை பெற்றிருந்தது. இதுவே 2023-24 நிதியாண்டில் ரூ.2,243.94 கோடியாக அதிகரித்துள்ளது. இதேபோல், 2023-24 நிதியாண்டில் ரூ.79. 924 கோடியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் நன்கொடை, 2023-24 நிதியாண்டில் ரூ.281.48 கோடியாக உயர்ந்துள்ளது,
இதற்கிடையே, அரசியல் கட்சிகள் நன்கொடை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க இந்திய தேர்தல் ஆணையம் செப்டம்பர் 30, 2024 வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி மட்டுமே தங்களது பங்களிப்பு அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பித்தன. பாஜக 42 நாட்கள், சிபிஐ(எம்) 43 நாட்கள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 27 நாட்கள் கழித்தும் தான் நன்கொடை தொடர்பான அறிக்கைகயை சமர்ப்பித்தன என்று தாமதமாக சமர்ப்பித்துல்ளன என்று ஏடிஆர் தெரிவித்துள்ளது.
நன்கொடை வழங்கிய நிறுவனங்கள்:
நாடு முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் நபர்கள் சார்பில் மொத்தம் 2,544.28 கோடி ரூபாய் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
தேசிய கட்சிகளுக்கு பல்வேறு தனியார் வணிக நிறுவனங்கள் 3,755 எண்ணிக்கையிலான நன்கொடைகள் வழங்கி உள்ளன என்றும், இவற்றில் மதிப்பு ரூ.2,262.55 கோடியாகும் (மொத்த நன்கொடையில் 88.92 சதவீதம்) எனவும் ஏடிஆர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் ரூ.270.872 கோடியை (மொத்த நன்கொடையில் 10.64 சதவீதம்) 8,493 தனிநபர்கள் தங்களின் அபிமான கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது மடங்கு அதிகம்:
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கையின்படி, 2023 -24ஆம் நிதியாண்டில் மற்ற தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடையை ஒப்பிடுகையில், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து பாஜக ஒன்பது மடங்கிற்கு அதிகமாக நன்கொடை பெற்றுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.2064.58 கோடியாகும்.
இதையும் படிங்க: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவி; உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்! |
ஆன்லைன் தளத்தை உருவாக்க பரிந்துரை:
நன்கொடைகள் குறித்த அரசியல் கட்சிகளின் அறிக்கைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நன்கொடையாளர் விவரங்களை பொதுவில் அணுகக்கூடியதாக மாற்ற வேண்டும் எனவும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வலியுறுத்தி உள்ளது.
அதுமட்டுமின்றி, வெளிப்படைத்தன்மை, தரநிலைகளை பூர்த்தி செய்ய தவறிய கட்சிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் எனவும், அறிக்கை சமர்ப்பிப்புகள் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கண்காணிக்க ஒரு ஆன்லைன் தளத்தை உருவாக்க வேண்டும் எனவும் ஏசிஆர் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.