அனகாப்பள்ளி: ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனகாப்பள்ளி மாவட்டம், கோடவுட்லா மண்டலத்தில் உள்ள கைலாசா நகரில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது. பட்டாசு வகைகளில் ராக்கெட்டுகள் தயாரிப்பதில் இந்த தொழிற்சாலை பிரபலம் என்று கூறப்படுகிறது. தற்போது திருமண சீசன் என்பதால் அதிக எண்ணிக்கையில் ஊழியர்களுடன் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 13) மதியம் ஆலையில் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது திடீரென பலத்த சத்தத்துடன் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஆலையின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் உள்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பெரும்பாலானோர் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சமர்லகோட்டா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
தகவலறிந்து தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் காயம் அடைந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக நர்சிபட்டினம் மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
புகாரின் பேரில் காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது குறித்து தகவலறிந்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்துறை அமைச்சர் அனிதா, கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோரிடம் விபத்து மற்றும் மீட்பு பணி குறித்து விசாரித்தார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை குறித்தும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விசாரித்தார். அவருக்கு ஆந்திர அரசின் உயர் அதிகாரிகள் தற்போதைய நிலை குறித்து விளக்கமாக கூறினர். இதற்கிடையே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆந்திர மாநில சபாநாயகர் அய்யண்ணா பத்ருடு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் அவர் ஆறுதல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க நர்சிப்பட்டினம் ஆர்.டி.ஓ-வுக்கு சபாநாயகர் அய்யண்ணா பத்ருடு உத்தரவிட்டார். மேலும் நர்சிபட்டினம் மருத்துவமனையில் போதிய ஊழியர்கள், படுக்கைகள், வென்டிலேட்டர் இருப்பதை உறுதி செய்யவும் சபாநாயகர் அய்யண்ணா பத்ருடு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ''விடுதிக்குள் காதலி வரணும்" - செம பிளான் போட்டும் சொதப்பல்; வசமாக சிக்கிய மாணவர்!
இந்நிலையில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவலறிந்து உள்துறை அமைச்சர் அனிதா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணி நடக்கும் இடங்களை பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்த தீயணைப்புப் படையினருக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்