பத்ராசலம்: தெலங்கானா மாநிலம், பத்ராசலம் நகரில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான 2 மாடி கட்டடம் இருந்தது. இந்த கட்டடத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர் நன்கொடை வசூலித்து, மேலும் 4 மாடிகளுக்கு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 26) பிற்பகலில் இந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின்போது கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்த தொழிலாளர்கள் பலர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து காவல் துறை, வருவாய் மற்றும் பஞ்சாயத்து துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பொக்லைன் உள்ளிட்ட கனரக இயந்திரங்களுடன் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி, தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.
விபத்துக்குள்ளான 6 மாடி கட்டடத்தின் அருகிலேயே ஒரு கோயில் கட்டப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுவதால் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட மீட்பு பணியின்போது கட்டட இடிபாடுகளுக்கு அடியில் உயிருடன் இருந்த ஒருவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மேலும் ஒரு செல்போன் மற்றும் மதிய உணவு பையை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர்.
இதற்கிடையே மீட்கப்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வசதியாக மருத்துக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 முதல் 6 பேர் வரை தொழிலாளர்கள் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இறந்திருக்க மாட்டார்கள் என்றும், அவர்களை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் கண்ணீர்விட்டு கதறி அழுதபடி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கட்டுமான பணியில் குறைபாடுகள் இருந்ததாகவும், கட்டடத்தை கட்டுவதற்கு தரமற்றப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், இதுவே விபத்துக்கு காரணம் என்றும், அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஈரோடு பட்ஜெட்: ''தேர்தல் வந்தால் வார்டுக்கே செல்ல முடியாதே'' - கவுன்சிலர்கள் வேதனை!
இந்த விபத்தை நேரில் பார்த்த மக்கள் கூறும்போது, ''பழைய 2 மாடி கட்டிடத்தின் மீது மேலும் 4 மாடிகள் கட்டப்பட்டதால் புதிய கட்டுமானத்தை பழைய கட்டமைப்பு தாங்க முடியாமல் கட்டடம் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.'' என கூறினர்.
அதே சமயம், கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட ஐடிசியிடம் இருந்து சிறப்புக் குழுக்கள் மற்றும் இயந்திரங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்ட எஸ்பி வி.பாட்டீல் நிவாரணப் பணிகள் நடக்கும் இடத்தில் முகாமிட்டு உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்.